ஊரடங்கு உத்தரவை அடுத்து பெரும்பாலான பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் மக்கள் அருகில் விளையும், எளிதில் கிடைக்கக்கூடிய நமது நாட்டு காய்கறிகளை வாங்கி செல்வதால் இதன் தேவை அதிகரித்துள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களான சொக்கநாதிருப்பு, பிரமனூர், வெள்ளிகுறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வரும் நாட்டு காய்கறிகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில் 30,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதே போன்று இங்குள்ள சந்தைகளுக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வருவது வழக்கம். போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டதை அடுத்து மலைக் காய்கறிகளான கேரட், பீன்ஸ், முட்டை கோஸ் போன்றவற்றின் வரத்து முற்றிலும் சரிந்துள்ளது. இதனால் தற்போது அப்பகுதி மக்கள் நாட்டு காய்களான கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், புடலங்காய், பாகற்காய், மாங்காய் உள்ளிட்டவற்றையே வாங்கி செல்கின்றனர்.
அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பொதுவாக நாங்கள் விற்பனைக்கு கொண்டுவரும் நாட்டுகாய்கறிகள் நாள் முழுவதும் வைத்திருப்போம், மாலை வரை விற்பனை தொடரும். பெண்களும் மலை காய்கறிகளைத்தான் அதிகம் விரும்பி வாங்கி செல்வார்கள். ஆனால், தற்போது பிற காய்கறிகளின் வரத்து குறைந்ததை அடுத்து காலை 10.00 மணிக்கே நாங்கள் கொண்டு வரும் அனைத்து காய்கறிகளும் விற்பனையாகி விடுகிறது. மேலும் நமது நாட்டு காய்கள் பத்து நாட்கள் வைத்திருந்தாலும் வாடாது என்பதால் விரும்பி வாங்கி செல்கின்றனர், என்றார்.
Share your comments