நீங்கள் ஒரு டிவிட்டர் பயனாளராக இருந்தால் இன்று உங்கள் டிவிட்டர் கணக்கை காணும் போது அதிர்ச்சி நிச்சயம் காத்திருக்கும். டிவிட்டரின் ஆஸ்தான நீல பறவை பறந்து போய் எவர் க்ரீன் மீம் ஸ்பெஷல் நாயின் புகைப்படம் லோகாவாக மாறி இருப்பதை காண முடியும்.
இணைய வசதி பெருகியுள்ள இந்த காலக்கட்டத்தில் பல்வேறு சமூக வலைத்தளங்கள் இருப்பினும் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி கோலோச்சி கொண்டிருப்பது சில சமூக ஊடகங்கள் தான். உதாரணத்திற்கு முகப்புத்தகம், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக், சேனப்சாட் போன்றவை. இதில் ஒவ்வொன்றும் தன்னகத்தை தனி சிறப்பு ஒன்றினை கொண்டிருப்பதினால் தான் பயனாளர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சிறிய அளவிலான தகவல் மட்டுமே பதிவிடும் வகையில் இருந்த டிவிட்டருக்கு நெட்டிசன்கள் மத்தியில் தனிமரியாதை எப்பவும் உண்டு. ஆனால் அதற்கும் ஒரு சோதனைக்காலம் வந்தது. குரங்கின் கையில் பூமாலை என்பதனைப் போல உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டிவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.
ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் செலுத்த வேண்டும், நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் தனிநபர்களுக்கு நீல நிற டிக் என பலவற்றை அறிமுகப்படுத்தினார். மேலும் நிறுவனத்தை சீர்படுத்த கம்பெனி CEO முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் இறங்கினார். எலான் மஸ்க் வருகைக்குப் பின் டிவிட்டர் தளம் உலகளவில் மேலும் கவனத்தை ஈர்த்தது. காரணம் அவர் மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகள். அதுவும் இல்லாமல் அவர் பதிவிடும் சில டிவிட்கள் பயனாளர்கள் இடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதனிடையே டிவிட்டரில் அதிக ஃபாலோயர்களை கொண்ட நபர் என்ற பெருமையை கடந்த மாதம் பெற்றார்.
இந்நிலையில் தான், டிவிட்டர் என்பதற்கு தனி அடையாளமாக விளங்கிய அதன் நீல பறவை லோகோவினை நீக்கி மீம்களில் கொடிக்கட்டி பறக்கும் நாயின் புகைப்படத்தை லோகோவாக மாற்றியுள்ளார். அதற்கான விளக்கத்தையும் அவர் வழங்கியுள்ளார். பயனாளர்கள் ஒருபக்கம் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்தாலும், இந்த லோகோ மாற்றத்திற்கு பின் ஒரு குட்டி சம்பவமே இருக்கிறது எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
நீதிமன்ற வழக்கு:
பிரமிட் திட்டம் என்று கூறப்படும் 258 பில்லியன் டாலர்களுக்கு Dogecoin- கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் அவருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு எலான் மஸ்க் மனு செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
புகாரின்படி, 2019 முதல் கிரிப்டோகரன்சிக்கு எந்த மதிப்பும் இல்லை என்று எலான் மஸ்க் அறிந்திருந்ததாகவும், ஆனால் அதன் வர்த்தகத்தில் லாபம் ஈட்ட Dogecoin-ஐ ஊக்குவித்ததாகவும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. கிரிப்டோகரன்சி "Dogecoin பிரமிட் திட்டத்தை- லாபம் மற்றும் பொழுதுபோக்கிற்காக இயக்கவும், கையாளவும் உலகின் மிகப் பெரிய பணக்காரராக மஸ்க் தனது அடையாளத்தை பயன்படுத்தி அதன் மதிப்பினை ஏற்றினார்" என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெஸ்லா நிறுவன தயாரிப்புகளை Dogecoin பயன்படுத்தி வாங்கலாம் என மஸ்க் அறிவித்ததை அடுத்து Dogecoin இன் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
ட்விட்டரின் லோகோவை மாற்றிய அடுத்த சில மணி நேரங்களில், Dogecoin இன் மதிப்பு US$0.079 இலிருந்து US$0.094 ஆக உயர்ந்தது, கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து ஒப்பிடுகையில் இது தான் நாணயத்தின் அதிகபட்ச மதிப்பாக கருதப்படுகிறது.
டிவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளது சில விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ஆஸ்தான "நீல நிற குருவிக்கு பதில் நாய்” லோகோவா என சிலர் தங்கள் வருத்தத்தையும் பதிவிட்டு வருகின்றனர். அது சரி அவர் கம்பெனி, அவர் மொதலாளி-- நினைச்சதை பண்ண அவருக்கு உரிமை இருக்குனு சிலர் ஆதரவுக்கரமும் நீட்டியுள்ளனர். இன்னும் சிலர், வழக்கம் போல கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக இதை செய்திருக்கலாம், மீண்டும் பறவை வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
மேலும் காண்க:
உள்ளங்கை மஞ்சளா இருக்கு, பாதம் வேற வலிக்குதே.. ஒருவேளை இருக்குமோ?
Share your comments