அரசு தோட்டக்கலைத் துறை சார்பில், காய்கறி மற்றும் பழங்களின் சாகுபடி பரப்பை உயர்த்த மத்திய மற்றும் மாநில அரசுகள் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இவற்றை செயல் படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விதையில்லா விதைகள், மானிய விலையில் விதைகள், பழ மர கன்றுகள், குழித்தட்டுகள் போன்றவற்றை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 25 ஏக்கர் காய்கறி பயிர்கள் சாகுபடியையும், 5 ஏக்கர் பழப்பயிர்கள் சாகுபடியையும் அதிகப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் சராசரியாக ஒவ்வொருவருக்கும், ஒரு நாளைக்கு 207 கிராம் காய்கறிகள் மற்றும் 197 கிராம் பழங்கள் என்ற அளவில் உற்பத்தி ஆனாலும், தனிநபருக்கு 103 கிராம் காய்கறிகளும், 79 கிராம் பழங்களும் தான் கிடைக்கிறது. போதிய உற்பத்தி இல்லாதே இதற்கு முக்கிய காரணம்.
மக்கள் அனைவரும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய உற்பத்தியை உயர்த்துவது மிக முக்கியம். அரசு பல்வேறு நடவடிக்கைகளை மூலம் ஒவ்வொரு வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை, அவர்களின் வீட்டுத் தோட்டத்திலேயே உற்பத்தி செய்யும் நோக்கில், கிராமப்புற காய்கறி உற்பத்தி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் 100 விலையில்லா காய்கறி விதை தளைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் மட்டும் 31,500 காய்கறி தளைகள் விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, விதைகள், பழமரக்கன்றுகள் தேவைப்படுவோர் அருகில் இருக்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணையையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரையோ நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
Share your comments