நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் தேவை அதிகரித்திருப்பதால் தற்போது பிராய்லர் கோழிக்கான வரவேற்பு குறைந்து வருவதாக அத்தொழில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு அமோகமாக நடை பெற்று வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில், ஆண்டகளூர்கேட், புதுசத்திரம், வையப்பமலை ராசிபுரம், நாமகிரிப்பேட்டை,வெண்ணந்தூர், அத்தனூர், உள்ளிட்ட பகுதிகளில் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காக அதிக அளவு பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதிக முதலீடு மற்றும் இடவசதியும் தேவைப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களினால் இத்தொழிலை செய்வது சற்று கடினமானது.
சிறிய விவசாயிகள் உபதொழிலாக தங்களது தோட்டத்தின் சிறு பகுதியில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இறைச்சி பயன்பாட்டிற்காக பண்ணை முறையில் வளர்த்து வருகிறார்கள். குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பு, நோய் தாக்குதல் குறைவு போன்ற காரணங்களால் பலரும் இதில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான வளர்ப்பு குஞ்சுகள் ஈரோடு, பல்லடம், போன்ற சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்தக் கோழிகள் 90 நாள் முதல் 120 நாள்களுக்குள் வளர்ந்து விற்பனைக்கு தயாராகி விடுவதால் விவசாயிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அப்பகுதி விவசாயிகளுக்கு உபதொழில் மற்றும் கூடுதல் வருமானம் என்னும் நோக்கத்துடன் கால்நடை வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
Share your comments