சேலம் மாவட்டத்தில் மானாவாரி விளைநிலங்களில் சோளம் அதிகளவு விளைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பெய்து வரும் பருவமழையால் எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மகசூல் கண்டுள்ளது.
அறுவடை செய்து வரும் சோளமானது கால்நடைகளுக்கு ஏற்ற திவனமாக இருக்கும் என கூறுகிறார்கள். மேலும் நன்கு விளைந்த சோளத்தை உலர் தீவனமாக மாற்றி ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் தயார் செய்து வருகிறார்கள். இதனால் கால்நடைகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி தீவனம் கிடைக்கும் நிலை உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டில் ஏற்பட்ட வறட்சி, போதிய மழை இல்லாத காரணத்தால் தீவனத்தட்டுப்பாடு மற்றும் குடிநீர் பற்றாக்குறை போன்ற காரணங்களினால், விவசாயிகள் தங்களின் கால்நடைகளை விற்பனை செய்தனர். நிகழாண்டில் சோளம் விளைச்சல் அபரிமிதமாக இருப்பதால் கால்நடைகளை வளர்ப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் கால்நடை வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக நிகழாண்டில் பால் உற்பத்தி அதிகரிக்க வாய்புள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Share your comments