தமிழர்களின் பானம் என கொண்டாடப்படும் நீரா பானம் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக அரசு தேர்வு செய்யப்பட்ட தென்னை மரங்களில் இருந்து மட்டுமே நீரா பானம் எடுக்க அரசு அனுமதித்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம், பழநியில் விற்பனை மையங்களை அமைக்க வேளாண் துறை திட்டமிட்டு வருகின்றன.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 30,417 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடியாகிறது. கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் நீரா பானம் எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தகுதியான ஆயிரம் தென்னை மரங்களில் இருந்து மட்டுமே நீரா பானம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மரத்தில் இருந்து தினமும் 1.5 லிட்டர் நீரா பானம் எடுத்து வருகின்றனர். சேகரித்த நீரா பானத்தை விவசாயிகள் தென்னை உற்பத்தியாளர் சங்கத்திடம் கொடுக்கின்றனர். அவர்கள் அதனை சுத்திகரிப்பு செய்து, குளிர வைத்து அருந்துவதற்கு ஏற்றபடி தயார் செய்து கொடுக்கின்றனர்.
நீராவில் பல்வேறு இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உடலுக்கு தேவையான சோடியம், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், சர்க்கரை, புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. தற்போது திண்டுக்கல்லில் 10, பழநியில் 4 இடங்களில் நீரா பானம் விற்பனை மையம் அமைக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான தேவை மேலும் அதிகரித்திருப்பதால் விற்பனை மையங்களை அதிகப் படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
Share your comments