கரோனா குறித்த பீதி மற்றும் 144 தடை உத்தரவு போன்ற காரணங்களினால் சிறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர் எனலாம். காய்கறிகள், பழங்கள், கீரைகள் விற்பவர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் இவற்றை விற்பனை செய்ய இயலாது அதனை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்குகின்றனர்.
தமிழகத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் முருங்கைக்காய் சீசன் என்பதால், விளைச்சல் அதிகரித்துள்ளது. இருந்த போதும் அரசின் தடை உத்தரவால் முருங்கை விலையும் சரிந்து, விற்பனையும் செய்ய இயலாமல் நட்டத்தை சந்தித்து வருகின்றனர் . நன்கு விளைந்த காய்கள் மற்றும் கீரைகளை பறிக்காமல் இருக்கவும் முடியாது, மார்க்கெட்டிற்கு சென்று விற்கவும் முடியாமல் வீணாவதை தவிர்க்க ஒரு சில விவசாயிகள் காய்களை பறித்து கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தடை உத்தரவு, கரோனா தொற்று போன்ற காரணங்களினால் வெளியில் செல்லவே அச்சமாக உள்ளது. மேலும் பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருவதால் அவைகளுக்கு போதிய பசுந்தீவனம் வழங்க இயலாத நிலை உருவாகி உள்ளது. பசுந்தீவன பற்றாக்குறையை போக்கவும், வீணாகும் முருங்கையை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதாக தெரிவித்தனர்.
Share your comments