முக்கனிகளில் ஒன்றான பலா பழ சீசன் தற்போது துவங்கியுள்ளது. தமிழகத்தில் புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் விளையும் பலா பழங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் பலாபழங்கள் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. சீசன் துவங்கியதை அடுத்து நாள்தோறும், 20 டன் பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக போதிய சந்தை வாய்ப்பு இல்லாமல் உற்பத்தியாகும் பலா பழங்கள், உள்ளூரிலேயே தேக்கம் அடைந்துள்ளன. குறைந்த அளவிலான லாரிகள் இயக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கு தீர்வுகாணும் வகையில் தோட்டக்கலைத் துறை, மத்திய அரசின் உதவியுடன் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய தோட்டக்கலை ஆணைய அதிகாரிகளின் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தேக்கம் அடைந்துள்ள பலா பழங்களை, எளிய முறையில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கு அறிவுறுத்தி உள்ளது.
மத்திய தோட்டக்கலை ஆணையத்தின் அறிவுரையை ஏற்று பலா பழங்களை, கேரளாவில் உள்ள மதிப்புகூட்டி விற்பனை செய்யும் மூன்று தனியார் நிறுவனங்களை தொடர்பு கொண்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், தமிழகத்தில் தேக்கம் அடைந்துள்ள பலா பழங்களை எவ்வித இழப்பின்றி விற்பனை செய்யலாம். மதிப்புகூட்டி விற்பனை செய்வதன் மூலம் வருவாயும், சந்தை வாய்ப்பும் பெருகும் என்பதில் ஐயமில்லை என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
Share your comments