20 நிமிடத்தில் 25 மாடி குடியிருப்பு வளாக கட்டிடத்தின் மீது ஏறி நிதி திரட்டும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் கர்நாடகவினை சேர்ந்த ஜோதிராஜ். யார் இவர், எதற்காக நிதி திரட்டினார் போன்ற தகவலை காணலாம்.
உலகம் முழுவதும் தனது சகாச திறமையினால் கர்நாடக மாநிலத்திற்கு பெருமை சேர்த்தவர் தான் ஜோதிராஜ். எவ்வித உதவியுமின்றி வெறும் கைகளால் மட்டும் பாறை ஏறுதல், சுவர் ஏறுதல் என தன் திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் பெற்றவர் ஜோதிராஜ். தற்போது சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சாதனையினை படைத்துள்ளார், இந்த முறை ஒரு அகாடமி ஒன்றினை அமைப்பதற்காக நிதி திரட்ட 25 மாடி குடியிருப்பு வளாக கட்டிடத்தில் ஏறியுள்ளார்.
உடுப்பியின் பிரம்மகிரியில் உள்ள 25 மாடிகள் கொண்ட உட்ஸ்வில்லே உயர்மட்ட கட்டிடத்தில் ஜோதிராஜ் கடந்த வியாழக்கிழமையன்று வெறும் கையுடன் வெற்றிகரமாக ஏறினார். காலை 10:20 மணிக்கு கட்டிடத்தில் ஏறத் தொடங்கிய ஜோதிராஜ் 20 நிமிடத்தில் 25 மாடியினை ஏறி முடித்தார். வெற்றிகரமாக சாதனையினை நிறைவு செய்த பின் கட்டிடத்தின் விளிம்பில் நின்று கன்னட கொடியை அசைத்து கொண்டாடினார். இந்த சாதனையை காண கூடியிருந்த பொதுமக்களும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
அட்வென்ச்சர் குரங்கு கிளப்பை நிறுவுவதற்கு பணம் சேகரிக்கும் நோக்கில் ஜோதிராஜ் இந்த சாதனையினை செய்தார். சித்ரதுர்காவைச் சேர்ந்த ஜோதிராஜ் ஆறு பேர் கொண்ட குழுவுடன் உடுப்பியின் பிரம்மகிரியில் உள்ள 25 மாடிகள் கொண்ட கட்டிடத்திற்கு வருகை புரிந்தார். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்ட நிலையில் சாதனையில் ஈடுபடத் தொடங்கினார்.
கூடியிருந்த பொதுமக்களில் ஒருவர் இந்த சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், “எங்களுக்கு கீழே இருந்து அவர் ஏறுவதை பார்த்து கழுத்து வலியை வந்துவிட்டது. ஆனாலும் அவர் விடாமுயற்சியுடன் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்” என்றார்.
இது போல் ஏறுதலுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், தான் ஒரு அகாடமியை நிறுவத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு நிதி திரட்டும் வகையில் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்த அகாடமி மூலம் சாதனை நிகழ்வுகளுக்கு வழிகாட்டுதல், இதர சமூக பணிகளுக்கு உதவி வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
ஜோதிராஜ் சாகசக்காரர் மட்டுமல்ல உயிர் காக்கும் பணியிலும் ஈடுபட்டவர். இருப்பினும் இவருக்கான உரிய அங்கீகாரத்தை கர்நாடக அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. ஜோதிராஜின் முன்னோர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள். இவரின் சாகச நிகழ்வுகளை கண்டு ஜோதிராஜூக்கு உதவ தமிழக அரசு முன்வந்தது. ஒலிம்பிக் போட்டிக்கு அவரை தயார்படுத்தும் வகையில் உதவவும் தயாராக இருந்தது. ஆனால் இதனை ஜோதிராஜ் நிராகரித்துவிட்டார்.
ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்வதாக இருந்தால் கர்நாடக மாநில உதவியின் அடிப்படையில் தான் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார். தொடர் சாகசத்தில் ஈடுபட்டு வரும் ஜோதிராஜூக்கு கர்நாடக மாநில அரசு உதவ முன்வர வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
விவசாயிகளின் வாழ்விற்கான கேம் சேஞ்சர் - நானோ டிஏபிக்கு பிரதமர் வாழ்த்து
சாரஸ் மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சியை தொடங்கிவைத்த உதயநிதி
Share your comments