விடியற்காலை நேரத்தில், நெருப்பொளி வெளிச்சத்தை அள்ளிக் கொடுக்க இனிதே ஆரம்பமாகும் போகிப் பண்டிகை. மார்கழி மாத கடைசி நாளில், பனி மிகுந்த அதிகாலைப் பொழுதில் பழையனவற்றை தீயிலிட்டு எரித்து, தொடங்கி வைப்போம். ஊரெங்கும் புகைமண்டலமாக காட்சியளிக்கும். பனியும் புகையும் இரண்டற கலக்க, கடுங்குளிரிலும் உற்சாகம் பொங்க போகியைக் கொண்டாடி மகிழ்வோம். "பழையனக் கழிதலும், புதியன புகுதலும்" என்பதே போகியின் கொள்கை. அதற்கேற்ப, யாருக்கும் பயனில்லாத பழையனவற்றை எரித்து, புத்தாடை அணிந்து மகிழ்வோம்.
போகிப் பண்டிகை (Bhogi Festival)
சிறு வயது குழந்தைகள், போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளே, என்னவெல்லாம் தீயில் எரிக்கலாம் என்று சிந்தித்து, போகிக்காக காத்துக் கிடப்பார்கள். விடிந்ததும், தான் சேகரித்தவற்றையெல்லாம் எரித்து, வெளிவரும் நெருப்பில் குளிர் காய்வார்கள். பெரியவர்கள், வீட்டில் தேவையில்லாதவற்றை எரித்து, கொண்டாடுவது இயல்பான ஒன்று தான்.
சிலர் பழைய ஆடைகளையும் எரிப்பதுண்டு. யாருக்கும் பயனில்லாத கிழிந்த ஆடைகளை எரிப்பதில் தவறேதுமில்லை. ஆனால், கிழியாத ஆடைகளை, பழையது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் சிலர் போகி அன்று எரிப்பதுண்டு. அப்படி எரிப்பதால், நல்ல ஆடைகள் அனைத்தும் வீணாகிறது. உங்களுக்குத் தான் அது பழைய ஆடைகள், ஆனால் பலர் நல்ல ஆடைகள் இல்லாமல் தவிப்பதுண்டு. அவர்களுக்கு இந்த பழைய ஆடைகளை நாம் பரிசளிக்கலாம். பழைய ஆடைகளை எப்படி கொடுப்பது என்று தயங்காமல், உதவி செய்யுங்கள்.
பழைய ஆடைகளை அன்பு இல்லங்கள் மற்றும் சாலையோரத்தை வசிப்பிடமாகக் கொண்ட மனிதர்களுக்கு கொடுத்து உதவலாம். இனிவரும் போகிப் பண்டிகைக்கெல்லாம் உதவி செய்து கொண்டாடுங்கள். நீங்கள் செய்யும் உதவி உரியவருக்கு சென்று சேருவது முக்கியமான ஒன்று. இல்லையென்றால், செய்த உதவிக்கு பலன் இல்லாமல் போகலாம்.
பிளாஸ்டிக்கை எரிக்க வேண்டாம் (Don't fire plastics)
போகிப் பண்டிகைக்கு, தயவுசெய்து யாரும் நெகிழியை(பிளாஷ்டிக்கை) எரித்து விட வேண்டாம். நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம் கடமை. அதனால், நெகிழியை எரிப்பதை தவிர்க்க வேண்டும். சிலர் வாகனத்தின் சக்கரங்களை எரிப்பார்கள். இதனால், காற்று மாசுபட்டு பாதிக்கப்படுவது நாம் மட்டுமல்ல இயற்கையை நம்பி வாழும் பறவைகள் மற்றும் விலங்குகளும் தான்.
இயற்கை நமக்கு அளித்த சுத்தமான காற்றினை நாம் அசுத்தப்படுத்தக்கூடாது. போகி அன்று தேவையற்றதை எரிப்பதோடு மட்டும் இருந்து விடாமல், மரங்கள் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். அது நம் தலையாயக் கடமை. போகிப் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடி, அடுத்த நாள், தமிழர் திருநாள் தைப்பொங்கலை வரவேற்று, மகிழ்ச்சி பொங்க கொண்டாடுங்கள்.
பொங்கலைக் கொண்டாடினால் மட்டும் போதாது, அதற்கு காரணமான நம் உழவர்களை மதித்து, அவர்களை காக்க வேண்டும். உழவன் உணவளிக்கவில்லை என்றால், நம் நிலைமை தடுமாறக் கூடும். உழவனுக்கு உதவும் மாடுகளையும் மதிப்போம், அழியாமல் காப்போம்.
மேலும் படிக்க
வீரரோ, காளையோ ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி!
இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை அறிவிப்பு!
Share your comments