ஆன்லைனில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு உண்மையான பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமேசானில் ஆர்டர் (Order on Amazon)
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா கிராமத்தை சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக பாஸ்போர்ட் கவர் ஒன்றை ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் ஆர்டர் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1-ம் தேதி மிதுன் பாபுவுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. தான் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவர் தான் வந்துள்ளது என்று கருதிய மிதுன் பாபு அந்த கவரை பிரித்து பார்த்துள்ளார். ஆனால், கவரைப் பிரித்த மிதுனுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
உண்மையான பாஸ்போர்ட் (Original passport)
அமேசான் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட கவரில் பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட இருந்துள்ளது. இந்திய அரசால் விநியோகிக்கப்படும் பாஸ்போர்ட் அமேசானில் தான் செய்த ஆர்டரில் எப்படி வந்தது என்பது தெரியாமல் மிதுன் குழப்பமடைந்துள்ளார்.
இது குறித்து அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவை பிரிவில் தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு அவருக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.
விபரம் தெரிந்தது
அந்த பாஸ்போர்ட், திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடையது என்பதைத் தெரிந்துகொண்ட மிதுன், அவரைத் தொடர்புகொண்டார்.
அப்போது தான் அந்த பாஸ்போர்ட் முகமது சலீமின் உண்மையான பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது.
முகமது சலீம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாங்கியிருக்கிறார். அதில் தனது பாஸ்போர்ட்டை வைத்துள்ளார். ஆனால், ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவர் பிடிக்காததால் அதை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். திருப்பி அனுப்பும் போது கவரில் வைத்திருந்த தனது பாஸ்போர்ட்டை அவர் எடுக்க மறந்துவிட்டார்.
கவனக்குறைவு
முகமது சலீமிடமிருந்து ரிட்டன் வந்த பாஸ்போர்ட் கவரை மறுசோதனை செய்யாத ஆன்லைன் வணிக நிறுவனத்தினர் மீண்டும் அதே பாஸ்போர்ட் கவரை மிதுனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால், சலீமின் உண்மையான பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த மிதுன் வசம் சென்றுள்ளது.
அலட்சியம்
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ரிட்டன் அனுப்புவதில் வாடிக்கையாளர்களும், வந்த ரிட்டனை மற்ற வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவைப்பதில் ஆன்லைன் நிறுவனங்களும் கொஞ்சம் கவனம் இல்லாமல் செயல்படுவதுத் தெளிவாகிறது. இதுதான் ஆன்லைன் மோசடிக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
பட்டாசுக்கு பலியான தந்தை- மகன்- இருசக்கர வாகனத்தில் விபத்து!
வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!
Share your comments