சென்னையில் பெய்த கனமழையின்போது, மரம் அடியில் சிக்கிக்கொண்டவரை, தாயுள்ளம் படைத்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், தோளில் சுமந்து சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசாருக்கு தகவல் (Information to the police)
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பணிபுரிந்த உதயா, கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கி இருந்தார். மழையில் நனைந்ததால், உடல்நிலை மோசமடைந்து மயங்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மயங்கிய நிலையில்
இதையடுத்து டி.பி. சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி,சகக் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார்.அங்கு சாய்ந்துகிடந்த மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியபோது, கல்லறைத் தோட்டத்தில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
தோளில் சுமந்து (Carrying on the shoulder)
உடனடியாக இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அருகில் சென்று உயிருள்ளதா? எனப் பார்த்தார். உயிர் இருப்பதை அறிந்த அவர், சற்றும் யோசிக்காமல் உடனடியாக அவரை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு சாலைக்கு ஓடி வந்தார். பின்னர் ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் அந்த நபரை ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி துரிதமாக செயல்பட்டு ஒருவரின் உயிரை காப்பாற்றியது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அவருக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆணையர் பாராட்டு
தாயுள்ளத்தோடு தோளில் சுமந்து சென்ற ராஜேஸ்வரியை சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாகப் பாராட்டியுள்ளார். சிறந்த அதிகாரியான ராஜேஸ்வரி,எல்லா பாராட்டுகளுக்கும் உரித்தானவர் என்றுக் கூறியுள்ளார்.
முதல்வர் பாராட்டு
கனமழை காலத்தில், துணிச்சலாகச் செயல்பட்டு தாயுள்ளத்தை வெளிப்படுத்திய சிங்கப்பெண் ராஜேஸ்வரியை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, கொரோனா காலக்கட்டத்தில் ஓட்டேரி பகுதியில் சாலையோரம் வசித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
காற்றழுத்த தாழ்வு மண்டலம்-இன்று மாலை கரையைக் கடக்கிறது!
அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!
Share your comments