சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில்,கோவையில் உள்ள தனியார் நிறுவனம் தயாரிக்கும் தட்டுகள், திருப்பதிக்கு வரும் ஏழுமலையான் பக்தர்களுக்கு லட்டுடன் வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்டு பிரசாதம் வழங்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த தட்டு மற்றும் குவளைகள், டி.ஆர்.டி.ஓ., உதவியுடன் கோவையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
திருப்பதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்து, தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. லட்டு பிரசாதம் கொண்டு செல்ல, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ., உதவியுடன்மட்கும் தன்மை கொண்ட பைகள், சணல் பைகள் வினியோகிக்கப்படுகின்றன.
மேக்இந்தியா நிறுவனம்
இந்நிலையில், கோவையை சேர்ந்த மேக்இந்தியா நிறுவனம், டி.ஆர்.டி.ஓ.,வுடன் இணைந்து, வேளாண் கழிவுகளில் இருந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மட்கும் தன்மை கொண்ட, தட்டு, குவளைகள் போன்றவற்றை உருவாக்கியுள்ளது.
வேளாண் கழிகளில் இருந்து
மேக் இந்தியா நிறுவன தலைவர் அத்தப்ப மாணிக்கம் கூறியதாவது:
காய்ந்த பருத்திச் செடி, துவரை செடி, தேங்காய்மட்டை, தென்னை மட்டை, மரத்துாள் என அனைத்து விதமான வேளாண் கழிவுகளில் இருந்தும், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தட்டு, குவளை, ஸ்பூன், கிண்ணங்களை உருவாக்கலாம்.
மீண்டும் பயன்படுத்தலாம்
ஒட்டும் தன்மைக்காக குச்சிக்கிழங்கை பயன்படுத்தியுள்ளோம். மைசூரில் உள்ள பாதுகாப்பு துறையின், உணவு ஆராய்ச்சி ஆய்வகத்தின் (டி.எப்.ஆர்.எல்.,) கூட்டு ஒத்துழைப்புடன் இதை வடிவமைத்துள்ளோம். இந்த தட்டு, கிண்ணங்களில் லட்டு பிரசாதம் வழங்கலாம். இப்பொருட்களை, பக்தர்கள் மீண்டும், மீண்டும் பயன்படுத்த முடியும். துளியும் ரசாயனத்தன்மை இல்லாதது.
டீ, காபி, தண்ணீர் குவளைகள், கிண்ணங்கள், தட்டுகள் என அனைத்து வடிவங்களிலும் உருவாக்க முடியும். இதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் மட்டுமின்றி, தமிழக கோவில்கள், சுற்றுலாத் தலங்கள், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டிய இடங்களில், மாற்றுப் பொருட்களாக இவற்றை பயன்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments