கர்நாடக மாநிலத்தில் பிச்சை எடுக்கும் பாட்டி ஒருவர், தாம் பிச்சை எடுத்து சேகிரித்த 1 லட்சம் ரூபாயை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கி மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த நன்கொடை கோவிலில் போடப்படும் அன்னதானத்திற்காக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளியோர் மற்றும் வயதானவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கில், கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத்திற்கு பக்தர்கள் மனமுவந்து தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அந்த வகையில் கோவில் வாசலில் பிச்சை எடுத்த பாட்டி ஒருவர், தனது சேமிப்பில் இருந்த 1 லட்சம் ரூபாயை அன்னதானத்திற்கு நன்கொடையாக வழங்கி மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
எவ்வளவுதான் பணத்தை சேர்த்து வைத்திருந்தாலும், அதனை மற்றவர்களுக்குக் கொடுக்க நல்ல உள்ளம் வேண்டும். அந்த உள்ளம் இந்த 80 வயது பாட்டியிடம் உன்னதம்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபூர் தாலுகா, கங்கோலியை அடுத்த காச்சகோடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வத்தம்மா, இவரது கணவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின் சாப்பாட்டிற்கே வழியின்றி தவித்த அஸ்வத்தம்மா, தன் சொந்த மாநிலத்தில் பல கோவில்கள் முன்பு பிச்சை எடுத்து தன் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தார்.
இந்நிலையில் இவர் ஒவ்வொரு ஆண்டும் உடுப்பு ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழாவின் போது அன்னதானத்திற்காக நன்கொடை வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் பிச்சை எடுக்கும் பணத்தில் குறைந்த அளவு பணத்தை மட்டும் தன் செலவுக்காக எடுத்துக்கொண்டு மற்ற பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வந்துள்ளார். அப்படியாக சேர்ந்த பணத்தை இவர் கோவில்களுக்கும், டிரஸ்ட்களுக்கும் நன்கொடையாக வழங்குவது வழக்கம்.
அப்படியாக இவர் சமீபத்தில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் அன்னதானத்திற்காக ரூ1 லட்சம் பணத்தை வழங்கியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அன்னதானத்திற்கு, பிச்சை எடுத்து நிதி கொடுத்திருப்பதுதான் இந்த விஷயத்தில் வியப்பின் உச்சம்.
மேலும் படிக்க...
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 - அமைச்சர் தகவல்
தேர்த்திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 11 பேர் உடல் கருகி பலி!
Share your comments