dream car
புனேவினைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் தனது சொந்த முயற்சியில் வெறும் 1.5 லட்சம் செலவில் மின்சாரத்தில் இயங்கும் கார் ஒன்றினை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் உருவாக்கியுள்ள விண்டேஜ் லுக் மின்சார காருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
புனேவில் உள்ள வட்கான் மாவலின் நவ்கானே தாலுகாவில் அமைந்துள்ள ஜம்புல்வாடி என்ற கிராமத்தில் வசிக்கும் நவ்கானே என்ற விவசாயி தனது முதன்மை வருமான ஆதாரமாக இயற்கை விவசாயத்தை நம்பியுள்ளார். டெல்லிக்கு இவர் சென்றிருந்த போது, அவர் ஒரு இ-ரிக்ஷாவைக் கண்டார். அது தனது கனவு காரை உருவாக்கும் ஒரு யோசனையைத் தூண்டியது.
வீடு திரும்பியதும், தன்னிடமுள்ள பொருட்கள் மற்றும் பணத்தை வைத்துக் கொண்டு விண்டேஜ் காரை உருவாக்கும் முயற்சியில் முழு வீச்சுடன் இறங்கினார். அவர் ஒரு பழைய இரும்புக் கடையில் இருந்து கார் தயாரிப்பதற்கான பல்வேறு பொருட்களை தேடி சேகரித்தார். 10-ம் வகுப்பு மட்டுமே படித்து, பொறியியல் பின்னணி இல்லாத ரோஹிதாஸ் நவ்கானே, தனது சகோதரர், குழந்தைகள் மற்றும் நண்பரின் உதவியுடன், தனது கனவு காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஒன்றரை மாதம் கடுமையாக இதற்காக உழைத்து தனது கனவு காரினை உருவாக்கினார். இதற்கு மொத்தமாக அவருக்கு ரூ.1.5 லட்சம் மட்டுமே செலவானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹிதாஸ் நவ்கானேவின் மேம்படுத்தப்பட்ட விண்டேஜ் சிவப்பு காரை சாலையில் பார்க்கும்போது, அதனுடன் புகைப்படம் எடுக்க மக்கள் போட்டிப்போட்டு வருகிறார்கள். இந்த தனித்துவமான வாகனம் ஒரு பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, ஐந்து பேட்டரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் தூரத்தை வசதியாக கடக்க இயலும். பேட்டரியினை முழுமையாக சார்ஜ் செய்ய 5 முதல் 6 மணிநேரம் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
"மேக் இன் இந்தியா" திட்டத்தின் குறிக்கோளை நிறைவேற்றும் எண்ணத்துடன் இம்முயற்சியில் இறங்கியதாகவும் விவசாயி தெரிவித்துள்ளார். தசராவைக் கொண்டாடும் வகையில், நவகனே தனது காரை சிறப்பு பூஜை செய்து சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார்.
தற்போது, இந்த கார் புனே மாவட்டம் முழுவதும், குறிப்பாக அவரது தாலுகாவில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. சிறுவயது முதலே காரின் மீது அளப்பறிய ஆசை இருந்தது. இன்று தனது சொந்த முயற்சியில் நிறைவேறியுள்ளது என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது எனத் தெரிவித்தார் விவசாயி நவ்கானே.
இதையும் காண்க:
Kalamassery blast: கொச்சியில் அடுத்தடுத்து 3 குண்டு வெடிப்பு- ஒருவர் பலி
அடிச்சு வெளுக்கப் போகுது- 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Share your comments