தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தக்காளி விலை சரிந்துள்ளது. இதனால் விசாயிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த மாதம் வரை தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்து கிலோ, ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. இந்நிலையில், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து, தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இங்குள்ள விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி சந்தைக்கு, சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் 200 டன் தக்காளி கொண்டு வரப்பட்டு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் சந்தையில் உள்ள இடைத்தரகர்கள், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு ஒட்டு மொத்தமாக வாங்கி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வியாபாரிகளிடம், கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
விவசாயிகளிடம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 15 வரை வாங்கி அதை, ரூ.20 முதல் 30 வரை விற்பனை செய்து வருவதாக கூறப் படுகிறது. எனவே விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Share your comments