உங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்கிக் கொள்ள வீட்டுக் கடன் கைகொடுப்பது போலவே, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்க வாகனக் கடன் கைகொடுக்கிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனக் கடன் வழங்குகின்றன.
கடன் வசதி மூலம் வாகனங்களை வாங்குவது எளிது என்றாலும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சிறந்த பலன்கள் அளிக்கும் சரியான கடன் வசதியை நாட வேண்டும். அந்த வகையில் இரு சக்கர வாகனக் கடன் பெறும் போது, மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஒப்பீடு தேவை:
கடனுக்கான நிபந்தனைகள் நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். எனவே, கடன் பெறுபவர் முதலில் பல்வேறு நிறுவனங்கள் அளிக்கும் கடன் வசதிக்கான நிபந்தனைகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதன் மூலம், செயல்முறை கட்டணங்கள் போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் மறைமுக கட்டணம் உள்ளதா என்றும் தெரிய வரும்.
கடன் மதிப்பு:
பொதுவாக வாகன மதிப்பில், 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படலாம். வாகன ரகம், விண்ணபிப்பவர் தகுதிக்கு ஏற்ப இது அமையும். கடன் பெறுபவர் தான் வாங்க இருக்கும் வாகனத்திற்கு ஏற்ற கடன் தொகை அளிக்கக்கூடிய வங்கி / நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
கூடுதல் தொகை:
கடன் மதிப்பு அதிகமாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். அதிக தொகை கடனாக கிடைக்க வாய்ப்பு இருக்கும் போது, அதற்கேற்ப விலை அதிகமான வாகனத்தை வாங்கும் துாண்டுதல் ஏற்படலாம். இவ்வாறு செய்வது கடன் தவணையை செலுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், தேவைக்கேற்ற வாகனத்தை நாட வேண்டும்.
வட்டி விகிதம்:
விண்ணபிப்பவர் வருமானம், வயது, வேலை ஆகிய அம்சங்கள் அடிப்படையில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனக் கடன் பெற வலுவான கிரெடிட் வரலாறு தேவையில்லை என்றாலும், இது சிறந்த வட்டி விகிதம் பெற உதவலாம். கடனுக்கான மற்ற செலவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறப்பு சலுகைகள்:
பல நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் சிறப்பு சலுகைகளை அளிக்கின்றன. பருவ மழைக்கால சலுகைகள் கூட அளிக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளை பயன்படுத்தி செலவை குறைக்கலாம்.
மேலும் படிக்க
OLA தொழிற்சாலையில் 10,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு!
பார்த்தாலே பரவசமாகும் பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சம்!
Share your comments