தற்போது மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 850 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது.
கால்நடைகளை தாக்கும் தொற்று நோய்களில் கோமாரி நோய் முக்கியமானதாகும். கோமாரி என்ற கால் மற்றும் வாய் காணை நோயானது வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது. இதனால் வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். இதனால் பால் குறைதல், சினை பிடிப்பதில் சிரமம், கருச்சிதைவு போன்றவை ஏற்படும். இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.
மாவட்ட இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் கூறுகையில், கால்நடைகளை பாதுகாக்கவும், விவசாயிகள் நஷ்டம் அடையாமல் தடுக்கவும் இந்த சிறப்பு முகாமை கால்நடை பராமரிப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த தடுப்பூசியினை கால்நடைகளுக்கு போடும்போது 100 சதவீதம் பாதுகாக்க முடியும். அக்டோபர் 14 முதல் 21 ஆம் தேதி வரை அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் போடப்படும். காலை 6:00 முதல் 9:00 மணி வரையிலும், மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரையிலும் தடுப்பூசி போடப்படும். கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments