கோடியக்கரை அருகே ஆமை ஓடு போன்ற தோற்றத்துடன் மீனவர்கள் வலையில் அதிசய நண்டு சிக்கியது. இந்த நண்டை இதுவரை பார்த்ததே இல்லை என மீனவர்கள் (Fishers) ஆச்சர்யத்துடன் தெரிவித்தனர்.
பைபர் படகு மீனவர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் பைபர் படகுகள் எனப்படும் சிறிய வகை படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பிடிக்கப்படும் காலா, வாவல், வஞ்சிரம், பொடி வகை மீன்கள், இறால், நண்டு உள்ளிட்டவை பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அரிய வகை உயிரினங்கள்
வேதாரண்யம் கடல் பகுதி ஆலிவர் ரெட்லி ஆமைகள், டால்பின்கள் போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது. ஆலிவர் ரெட்லி வகை ஆமைகள் பல ஆயிரம் மைல் தூரம் கடலில் நீந்தி வந்து வேதாரண்யம் கடலோர பகுதியில் முட்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. ஆமைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழல் வேதாரண்யம் கடலோர பகுதியில் நிலவுவதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை உள்ளிட்ட இடங்களில் தங்கி இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது வழக்கம்.
ஆமை ஓடு போல
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாம்பன் மீனவர்கள் சிலர் ஒரு படகில் கோடியக்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துவிட்டு நேற்று கரை திரும்பினர்.
அப்போது பிடிபட்ட மீன்களை விற்பனைக்கு (Fish sales) அனுப்புவதற்கு மீனவர்கள் ஆயத்தமாகிய போது வலையில் வித்தியாசமான தோற்றம் கொண்ட 2 நண்டுகள் சிக்கி இருந்தது தெரியவந்தது. வழக்கமான நண்டுகள் போல் இல்லாமல் அவற்றின் உடல் பகுதி ஆமை ஓடு போல தோற்றம் அளித்தது. முன்புறம் கொடுக்குகளும் வழக்கமாக பிடிபடும் நண்டுகள் போல் இல்லை. பார்த்ததும் இவை நண்டு தானா? என்ற சந்தேகமும் மீனவர்களுக்கு ஏற்பட்டது.
250 கிராம் எடை
இந்த அதிசய நண்டுகள் ஒவ்வொன்றும் 250 கிராம் எடை இருந்தது. இந்த வகை நண்டை இதுவரை பார்த்ததே இல்லை என்றும், இது அதிசயமாக இருப்பதாகவும் மீனவர்கள் ஆச்சர்யத்துடன் தெரிவித்தனர்.
முதியவர்கள் சிலர் இவற்றை பார்த்து, நண்டு வகையை சேர்ந்தது என உறுதிபட தெரிவித்தனர். ஆமை ஓடு போன்ற தோற்றத்துடன் வித்தியாசமாக காட்சி அளித்த நண்டுகளை அந்த பகுதியை சேர்ந்த பலர் பார்த்து வியந்து சென்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தினம் ஒரு கேரட் சாப்பிட்டால் கொழுப்புச்சத்தைக் குறைக்கலாம்! ஆய்வில் தகவல்
SBI வங்கியில் டெபிட் கார்டு இல்லாமல் ATM-ல் பணம் எடுக்கலாம்! எளிய வழிமுறை!
Share your comments