கன்னியாகுமரி, தென்காசி உட்பட 14 மாவட்டங்களில் இன்று, கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
17.10.21
கனமழை ( heavy rain)
கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை (Moderate rain)
ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், இனி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
18.10.21
மிதமான மழை (Moderate rain)
வடக்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (2 Depression)
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடக்கு ஆந்திராக் கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதேபோல், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா- லட்சத்தீவு கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
வங்கக்கடல் பகுதிகள் (Areas of the Bay of Bengal)
16.10.21 முதல் 17.10.21 வரை
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)
16.10.21 முதல் 17.10.21 வரை
இதேபோல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வாழைப்பழத்திற்கு இந்த ஆண்டு என்ன விலை கிடைக்கும்? TNAU கணிப்பு!
Share your comments