விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு தங்கள் கடன் சுமையில் சிறிய பங்கு குறைந்துள்ளது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அனைத்து நிதி நிறுவனங்களிலும் வாங்கப்பட்ட குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
1.5% வட்டி மானியம்
இதன்படி,பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக பெறப்பட்ட 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் கிடைக்கும்.
ரெப்போ வட்டி 5.4%
ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. கடந்த மே மாதம் முதல் தற்போதைய ஆகஸ்ட் மாதம் வரை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4%இல் இருந்து 5.40% ஆக உயர்த்தியுள்ளது. எனவே, சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, 3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
3% வட்டி மானியம்
இதேபோல், கிசான் கிரெடிட் கார்டு வாயிலாக விவசாயிகளுக்கு தொடர்ந்து 3% வட்டி மானியம் கிடைக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!
Share your comments