குன்றத்துார் தாலுகா நாவலுார் கிராமத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முனையம் அமைய உள்ளது. இதன் மூலமாக, அப்பகுதியைச் சேர்ந்த 1,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். தவிர 5 லட்சம் கிலோ விளை பொருட்களை இருப்பு வைக்கலாம் என, வேளாண் விற்பனை துறை தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் நாவலுார் கிராமத்தில், பல ஏக்கர் நிலையத்தில் 'டெர்மினல் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்' எனும் காய்கறி ஏற்றுமதி முனையம் துவக்கப்படும் என, 2010ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முனையம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
வேளாண் ஏற்றுமதி முனையம் (Agriculture Export Terminal)
முதற்கட்டமாக, இடம் தேர்வு செய்யும் பணியில், வேளாண் துறையினர் ஈடுபட்டனர். குன்றத்துார் தாலுகா நாவலுார் கிராமத்தில், 35 ஏக்கர் மேயக்கால் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேளாண் ஏற்றுமதி முனையம் திட்டப் பணிகள் மேற்கொள்ள, உழவர் களஞ்சியம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் இருந்து, காய்கறி மற்றும் வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டிய பொருட்களாக விற்பனை செய்யப்பட உள்ளது.
வேலை வாய்ப்பு (Employment)
மேலும், 3 லட்சம் கிலோ முதல், 5 லட்சம் கிலோ காய்கறி வரையில் இருப்பு வைத்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான கிடங்கு, காய்கறி சுத்தம் செய்யும் குடோன், தரம்பிரிக்கும் கூடாரம், 'பேக்கிங்' செய்யும் அறை, குளிரூட்டும் அறை என, பல வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பணிக்கு, 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என, வேளாண் விற்பனை துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துணை இயக்குனர் முகமதுரபிக் கூறியதாவது: குன்றத்துார் அடுத்த, நாவலுார் பகுதியில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முனையம் துவக்க, உழவர் களஞ்சியம் நிறுவனத்திற்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு, 35 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்நிறுவனத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிறுவனம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலமாக, 1,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். மேலும், உழவர் உற்பத்தி நிறுவனத்தினரின் விளை பொருட்களுக்குரிய விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
Share your comments