வேளாண்மை என்பது முழுவதும் பருவங்கள் மற்றும் காலநிலையை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. வேளாண்துறையில் ஏற்படும் பெரும்பாலான இழப்புகளுக்கு முக்கிய காரணம் நிலையற்ற காலநிலை ஆகும். இருப்பினும் ஏற்படும் இழப்பை ஓரளவு தவிர்க்க வானிலையை முன்கூட்டியே அறிந்துக் கொண்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மகசூல் இழப்பை ஓரளவிற்கு தவிர்க்க இயலும். எனவே வேளாண்மை தொழிலில் வானிலையால் ஏற்படும் இழப்பை தவிர்க்க வானிலை முன்னறிவிப்பு பெரிதும் உதவுகிறது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் வானிலை முன்னறிவிப்புகள்
- குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு
- மத்திய கால வானிலை முன்னறிவிப்பு
- நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு
குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு
அடுத்து வரும் மூன்று நாட்களில் வானிலை எவ்வாறு இருக்கும் என்பதை குறுகிய கால வானிலை முன்னறிவிப்பின் மூலம் அறிந்துக் கொள்ளலாம். இது சுமார் 70 முதல் 80 சதவிகித நம்பகத்தன்மை உடையதாக இருக்கும். இதில் மழை, வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் திசை, மேகமூட்டம், காற்றில் ஒப்பு ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி கிடைக்கும் நேரம் போன்ற காரணிகளில் ஏற்படும் மாற்றங்களை தெரிவிக்கிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் அன்றாடம் நடைபெறக் கூடிய வேலைகளை துரிதப்படுத்தவும் அல்லது ஒத்தி வைக்கவும் உதவுகிறது. இது போன்ற முன்னறிவிப்பு விவசாயிகளுக்கு எவ்விதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு சில உதாரணங்கள்
- வரும் நாட்களில் மழை எதிர்பார்க்கப்படும் என முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டால் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதை தாமதப்படுத்தலாம்.
- பயிர் பாதுகாப்பு செய்ய பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்து தெளிக்கும் பொழுது மழை பொழிவதற்கான அறிகுறிகள் இல்லாமல் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பூச்சிகளிலும் நோய்களிலும் பூச்சி மருந்தின் முழு செயல்திறனை அடைய வைக்க முடியும். மருந்து தெளித்த பின்பு மழை பொழிந்தால் தெளித்த மருந்துகள் மழை நீரினால் அடித்துச் செல்லப்படுவதால் எதிர்பார்க்கின்ற பலன் கிடைக்காது.
- நல்ல வெயில் எதிர் பார்க்கப்படும் பொழுது அறுவடை செய்தல், கதிரடித்தல் மற்றும் தூற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
மத்திய கால வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 5 நாட்களுக்கு வானிலை எவ்வாறு இருக்கும் என மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மூலம் அறிந்துக் கொள்ளலாம். இந்த முன்னறிவிப்பானது வரும் நாட்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை, மழையளவு, மேகமூட்டம், காற்றின் வேகம் மற்றும் திசை போன்ற வானிலை காரணிகள் எவ்வாறு எதிர்பார்க்க படுகிறது என்பதை தெரிவிக்கிறது. விவசாயிகளின் பயிர் நிலையை அறிந்து மாறுபடும் வானிலைக்கு ஏற்றவாறு வேளாண் பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டு 60 முதல் 70 சதவிகிதம் நம்பக தன்மையுடன் விவசாயிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
- இவ்வறிக்கையின் உதவியால் பயிர் விதைப்பு செய்யவோ அல்லது விதைப்பை தள்ளிப்போடவும் முடிவெடுக்கலாம். மானாவாரி நிலங்களில் அடுத்த ஒரு வாரத்தில் மழை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தால் விதைப்பதற்கு சிபாரிசு செய்யலாம்.
- மழை வருவதற்கான சாத்தியம் இல்லை எனில் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களுக்கு எதிராக தக்க சமயத்தில் மருந்து தெளித்து தேவையற்ற இழப்புகளை தவிர்க்கலாம்.
- வேலையாட்கள், பண்ணை இயந்திர மற்றும் தெளிப்பான் போன்ற கருவிகளை உரிய அளவில் பயன்படுத்தலாம்.
- இவ்வறிக்கையை கொண்டு உரமிடுதல் மற்றும் பயிர் அறுவடை செய்யும் காலத்தை நிர்ணயம் செய்யலாம்.
நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு
நீண்ட கால வானிலை முன்னறிவிப்பானது பத்து நாட்கள் முதல் ஒரு பருவம் வரையிலான வானிலை மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்திய வானிலைத் துறையால் கொடுக்கப்பட்டு வருகிறது. வேளாண்மைத் தொழிலில் குறிப்பிட்ட சில தொழில் நுட்பங்களை தேர்வு செய்ய இக்கால வானிலை முன்னறிவிப்பு பயன்படுகிறது. இது சுமார் 50 முதல் 60 சதவீதம் வரையில் நம்பகத் தன்மை உடையதாக இருக்கும்.
எதிர்நோக்கும் பருவத்தின் வானிலையை கொண்டு அதற்கு ஏற்றார்போல் பயிர் வகைகளை நிர்ணயம் செய்யலாம். மேலும் பயிர் மேலாண்மை முறைகளை திட்டமிடவும் நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு பயன்படுகிறது.
இந்த மூன்று வகையான வானிலை முன்னறிவிப்புகளை ஒப்பிடும்போது மத்திய கால வானிலை முன்னறிவிப்பு விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வாறு குறைந்த செலவில் அதிக வருமானம் விவசாயத்தில் பெற வானிலை முன்னறிவிப்பு மிகவும் உதவுகிறது.
Dr. வெங்கடேஸ்வரி
Dr. அருள் பிரசாத்
Dr. பாலசுப்பிரமணியன்
Dr. பாலாஜி
வேளாண்மை அறிவியல் நிலையம்,
இராமநாதபுரம்
Share your comments