திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளத்தை மூலப் பொருளாக கொண்டு செயல்படும் அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக, 35 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் (Atma Nirbhar Bharat Abhiyan) ஒரு பகுதியாக அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக, பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-21 முதல் 2024-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீத மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு மக்காச்சோளம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனிநபர் அடிப்படையில், ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சி போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படும்.
மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனத்துக்கு, தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
இது தொடர்பான விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) நேரிலோ அல்லது 91235 01559 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வேர்களுக்கு உயிரூட்டி மகசூலை அதிகரிக்கும் Nemolip - ஸ்ரீவாரி ஆர்கானிக்ஸின் அற்புதத் தயாரிப்பு!
காய்கறி பயிரிடுபவரா நீங்கள்? உங்களுக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை!
Share your comments