பயிர்களுக்கு பரவலாக அம்மோனியா உரம் போடுகின்றனர். ஆனால், தேவைக்கு அதிகமாக அந்த உரம் போடப்படுகிறது. இதனால், வயலிலிருந்து வழிந்தோடும் மிகையான அம்மோனியா கலந்த தண்ணீர், கால்வாயில், நீர் நிலைகளில் கலந்தால், அவை வேதியியல் மாசடைகின்றன. செயற்கை அம்மோனியாவுக்கு பதிலாக, இயற்கையாகவே அதை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் இருந்தால் எப்படி இருக்கும்? அதைத் தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
இயற்கை அமோனியா (Organic Ammonia)
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒருவகை பாக்டீரியாவை தேர்ந்தெடுத்தனர். அது இயல்பாகவே சுற்றுப்புறத்திலுள்ள நைட்ரஜன் வாயுவைக் கிரகித்து, அம்மோனியாவாக மாற்றி, கழிவாக வெளியேற்றும் தன்மை கொண்டது. அந்த பாக்டீரியாவை மேலும் கூடுதலாக அம்மோனியாவை வெளியேற்றும்படி மரபணு திருத்தம் செய்தனர்.
இந்த புதிய பாக்டீரியாவை, நெல் விளையும் மண்ணில் விட்டபோது, அவை பல்கிப் பெருகி, அம்மோனியாவை வெளியேற்றின. இதை, அந்த நெற்பயிர்களும் உள்வாங்கிக் கொண்டன. இப்போது, வெவ்வேறு அளவுகளில் அம்மோனியாவை வெளியேற்றும் திறன் கொண்ட பாக்டீரியாக்களை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதனால் எந்தப் பயிர்களுக்கு எத்தனை அம்மோனியா தேவை என்பதை அறிந்து அதற்கேற்ற உற்பத்தித் திறனுள்ள பாக்டீரியாவை மண்ணில் பரவ விட முடியும். அது நடைமுறைக்கு வரும்போது, விவசாயிகள் செயற்கை அம்மோனியா உரத்தை அடியோடு நிறுத்திவிட்டு, அம்மோனியாவை உற்பத்தி செய்யும் பாக்டீரியாவை இலவசமாக வாங்கி, மண்ணில் வாழவிடப் போகிறார்கள்.
மேலும் படிக்க
நெற்பயிாில் கதிர்நாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
Share your comments