பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும், விளைநிலங்கள் கட்டடங்களாக மாறி வருவதாலும், மண்ணின் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்களில் குறைபாடு ஏற்படுவதாலும், அங்கக உரங்களைப் (Fertilizers) பயன்படுத்தாமை அல்லது குறைத்து இடுவதாலும், பசுந்தாள் உரமிடுதல் (Green manure fertilization) காலத்தின் கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.
பசுந்தாள் உரத்தின் பயன்கள்
- மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, அதிக கரிம அளவை மண்ணில் நிலை நிறுத்துதல் மிக அவசியம். தொடர்ந்து தழை, எருக்களை நிலத்தில் இடுவதால், மண்ணில் கரிமம் நிலைபெறும். மண்ணில் சேரும் கரிமப் பொருள்களால் மண் புழுக்களின் (Earthworms) வளர்ச்சியும், தழைச் சத்தை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களின் (Bacteria) வளர்ச்சியும் அதிகரிக்கின்றன. மேலும், மண் இயல்பு அடர்த்தி குறைகிறது. அதனால், உழுவது முதல் விதை முளைப்பு, பயிர் வளர்ச்சி, நீர்ப்பிடிப்பு ஆகியன எளிதாகின்றன.
- பசுந்தாள் உரப் பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர்ப் பகுதியில் சிறுமுடிச்சுகள் மூலம் நிலைநிறுத்தி, அந்தப் பயிரின் தழைசத்து, உரத்தேவையினை தானே பார்த்துக் கொள்கிறது. இதனால், செடியின் வளர்ச்சி அதிக பசுமையாக இருக்கிறது. மேலும், மண் வளமும் பெருகிறது. பசுந்தாள் பயிர்களை அப்படியே மடக்கி, நிலத்தின் உழும் முறையை தொன்றுதொட்டு நாம் தெரிந்த முறையாகும்.
- பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொழுஞ்சி மற்றும் சித்தகத்தியில் தழை, மணி, சாம்பல் சத்துடன் (ash nutrient) நூண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. பசுந்தாள்களை மண்ணில் இட்ட பின் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சல் வெகுவாக அதிகரிக்கின்றது.
- மேலும், அடுத்து விளைவிக்கும் பயிர்களுக்கான ரசாயன உரத் தேவையும் குறைகிறது. பசுந்தாள் பயிர்களை நிலங்களில் விதைத்த 30-45 நாள்களுக்குள் நிலத்தில் மடக்கி உழுது விடவேண்டும். அதாவது, பசுந்தாள் பயிர்களின் பூக்கும் பருவத்துக்கு முன்பாக இதனை மடக்கி உழ வேண்டும்.
- நெல் வயலில் (Paddy Field) நாற்று நடுவதற்கு 20-25 நாள்களுக்கு முன்னரும், மற்ற நிலங்களில் விதைப்பதற்கு 30-35 நாள்களுக்கு முன்னரும் பசுந்தாள்களை மண்ணில் இட்டு உழுதுவிடவேண்டும். அவ்வாறு உழும் போது, தழைச்சத்தை வெகுமளவில் கொடுக்கின்றது. அவை மட்கும்போது உற்பத்தியாகும் கரிம அமிலங்களின் வினையால் (Reaction of organic acids) மண்ணில் பயிருக்குக் கிடைக்கும் துத்தநாகச் சத்து (Zinc nutrient) அதிகரித்துக் காணப்படுகிறது.
- பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பில் கோ-1, கொழிஞ்சியில் எம்டியு-1, மணிலா அகத்தியில் கோ-1 ஆகிய ரகங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. பசுந்தாள் உற்பத்திக்கு ஏக்கருக்கு சணப்பு என்றால் 10 கிலோ, தக்கைப் பூண்டு என்றால் 20 கிலோ, மணிலா அகத்தி என்றால் 15 கிலோ அல்லது கொழிஞ்சிக்கு 8 கிலோ போதுமானது.
- சணப்பின் மூலம் ஏக்கருக்கு சுமார் 7 டன் உயிர் பொருள்களும் 35 கிலோ தழைச்சத்தும், தக்கைப் பூண்டில் 10 டன் உயிர் பொருள்களும் 60 கிலோ தழைச்சத்தும், மணிலா அகத்தியில் 10 டன் உயிர் பொருள்களும் 50 கிலோ தழைச்சத்தும் மற்றும் கொழுஞ்சியில் 3 டன் உயிர் பொருள்களும் 25 கிலோ தழைச்சத்தும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
- பசுந்தாள் உரமிடுவதால் அங்ககப் பொருள்கள் மண்ணில் சேர்கின்றன. இதனால், மண்ணின் வளம் மேம்படுகிறது. நிலத்தில் நீர் தேக்கும் தன்மை அதிகரிக்கின்றது. அடுத்ததாகப் பயிரிடப்படும் பயிர்களின் நுண்ணூட்டத் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது. ஆக மொத்தத்தில், 15 முதல் 20 சதவீத பயிர் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பசுந்தாள் உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, விளைநிலம் மற்றும் சுற்றுச்சூழலை (Environment) மாசுபடுவதிலிருந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு சிறந்ததோர் உலகத்தை கொடுப்பது நமது கடமையாகும்.
ஆதாரம் : வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், மதுரை
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments