விவசாயத்தில் விளைச்சலை அதிகரிப்பது மட்டும் இலாபம் தந்து விடாது. சிலநேரங்களில் விளை பொருட்களின் விலை குறைந்து விட்டால், விளைச்சல் அதிகமாக இருந்தாலும் நட்டமே ஏற்படும். இதனை சமாளிக்க மாற்று வழியினை விவசாயிகள் கையில் எடுத்தே ஆக வேண்டும். அந்த மாற்று வழிதான் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது. எந்த ஒரு விளைபொருளையும் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதனால், விவசாயிகளுக்கு இலாபம் பன்மடங்கு அதிகரிக்கும்.
தென்னை நார்க் கழிவு (Coconut Fiber Waste)
தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் தேங்காயை விற்பனை செய்த பிறகு, அதிலிருந்து கிடைக்கும் இழிவான தேங்காய் நாரை மதிப்புக் கூட்டினால், தென்னை விவசாயிகள் இன்னும் இலாபம் பெறலாம் என்பது, வேளாண்மையில் முன் அனுபவம் பெற்றவர்களின் கருத்து. தென்னை நார்க் கழிவிலிருந்து உரம் தயாரித்தால், விவசாயத்திற்கு உபயோகமாக இருக்கும். மேலும், இதனை இயற்கை உரமாக மற்ற விவசாயிகளுக்கும் விற்பனை செய்யலாம்.
உரம் தயாரிப்பு (Compost preparation)
தென்னந்தோப்பில், தென்னை மட்டை மற்றும் தென்னை ஓலை ஆகிய கழிவுகள் அதிகமாக சேரும். இந்தக் கழிவுகளை தூள் தூளாக மாற்றி, சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக 1,000 கிலோ தென்னை நார்க் கழிவு சேர்ந்ததும், அதனுடன் ஐந்து பாட்டில் புளுரோட்டாஸ் மற்றும் ஐந்து கிலோ யூரியா கலவையை சேர்த்து கலக்கினால், தென்னை நார் உரம் கிடைத்து விடும்.
முதலில், 100 கிலோ தென்னை நார்க் கழிவை தரையில் கொட்டி பரப்பி விட வேண்டும். இதன் மீது ஒரு பாட்டில் புளுரோட்டாஸை தெளிக்க வேண்டும். பின்னர் மீண்டும், 100 கிலோ தென்னை நார் கழிவைக் கொட்டி வைத்து, 1 கிலோ அளவு யூரியாவை தூவி விட வேண்டும். இதைப்போலவே, புளுரோட்டாஸ், தென்னை நார் கழிவு மற்றும் யூரியா என பத்து அடுக்குகளில் உரப் படுக்கை தயார் செய்ய வேண்டும்.
கூடுதல் வருமானம் (Extra Income)
தினந்தோறும், லேசான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்வதற்கு, தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு மாத காலத்திற்குப் பிறகு, மேல் உரம் கீழ் உரமாகவும், கீழ் உரம் மேல் உரமாகவும் கிளறி விட வேண்டும். இப்படிச் செய்தால், தரமான தென்னை நார் உரம் தயாராகி விடும். இந்த தென்னை நார் உரத்தை வயல்களுக்கு செலுத்தும் போது, நிலத்திற்கு தேவையான அனைத்து வித சத்துகளும் கிடைக்கும்.
எந்தப் பயிரைச் சாகுபடி செய்தாலும், இந்த தென்னை நார் உரத்தைப் பயன்படுத்தினால் கூடுதல் மகசூலைப் பெற முடியும். தென்னை நார் உரத்தை மற்ற விவசாயிகளுக்கும் விற்பனை செய்யும் பட்சத்தில், கூடுதல் வருமானம் பெறும் மாற்று வழியாக இது அமையும்.
மேலும் படிக்க
மண்வளம் காக்க தென்னை நாரில் கிப்ட் பேக்: மாற்றத்துக்கான வழி!
Share your comments