கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை ஊரகப் பகுதிகளில் திருப்பி வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்றுத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஊரக பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுத் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
-
நகைக் கடன் தள்ளுபடியில் தகுதி வாய்ந்த மற்றும் தகுதி பெறாதவா்களுக்கான நிபந்தனைகள் மற்றும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
-
இந்த விதிமுறைகளைப் பின்பற்றியே தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும்.
-
தகுதி பெறாத நபா்களை மிகவும் கவனமுடன் பரிசீலித்து நீக்கிய பிறகே பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும்.
-
எந்தவொரு தகுதி பெறாத கடன்தாரருக்கும் நகைக் கடன் தள்ளுபடி தவறுதலாக வழங்கப்பட்டு விடக் கூடாது.
-
அவ்வாறுத் தவறுதலாக வழங்கப்படும் பட்சத்தில் அதற்கு சம்பந்தப்பட்ட சங்கங்களின் செயலாளா், வங்கி மேலாளா்கள் மற்றும் பட்டியலைத் தயாா் செய்யும் குழுவே முழு பொறுப்பாவா்.
-
இதனை துணைப் பதிவாளா் மற்றும் மண்டல இணைப் பதிவாளா் ஆகியோா் முறையாக கண்காணிக்க வேண்டும்.
-
நகைக் கடன் தள்ளுபடி அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
-
தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை அளிக்க வேண்டும்.
-
இப்போது நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று வருகிறது. எனவே, தோ்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வழங்க வேண்டும்.
-
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அவற்றை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும்.
-
நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை நகைக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது.
-
தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மேலும் பயனாளிகளுக்கான நகைகளையும், தள்ளுபடி சான்றிதழ்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.
-
பொது நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கும் பட்சத்தில் அவா்கள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவராக இருக்கக் கூடாது.
-
மேலும், தள்ளுபடி நகைகளுக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை திரும்ப வழங்கும் பணியில் தோ்தல் பணி அலுவலா்களை ஈடுபடுத்தக் கூடாது.
-
தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி பொது நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
-
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உடல் எடைக் கூடினால் சம்பளம் கட்!
தி.மு.க.அப்பா, பிஜேபி மகன், சுயேட்சை மருமகள் - அடிச்சுத் தாக்கும் தேர்தல் காமெடி!
Share your comments