தமிழகத்தில் மாசிப்பட்டத்தில் இறவைப் பயிராக பருத்தி சாகுபடி செய்ய வேளாண்மை பல்கலை வெளியிட்டுள்ள எஸ்.வி.பி.ஆர் 2, 4, 6, கோ 17 ரகங்கள் ஏற்றவை. ரகத்திற்கு ஏக்கருக்கு 6 கிலோவும் வீரிய ஒட்டு ரகமாக இருந்தால் 900 கிராம் விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு தலா 400 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, 4 கிராம் டிரைகோடெர்மாவிரிடியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும்.
ஊடு விதை (Inter Seed)
3ம் நாள் பென்டிமெத்தலின் களைக்கொல்லியை ஏக்கருக்கு 1.2 லிட்டர் என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். களைக்கொல்லி தெளித்த மறுநாள் நீர்பாய்ச்ச வேண்டும். 90 சதவீத களைகள் கட்டுப்படுத்தப்படும். விதைத்த 10வது நாள் முளைக்காத இடங்களில் ஊடு விதை நட வேண்டும். 15வது நாள் ஒரு குத்துக்கு ஒரு செடி வீதம் இருக்குமாறு மீதியுள்ள செடிகளை அகற்ற வேண்டும். வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விதை நட்ட 20வது நாள் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கை ஒவ்வொரு செடிக்கு அருகில் வைத்து மண் அணைக்க வேண்டும்.
பயிர் ஊக்கி (Crop stimulant)
களைக்கொல்லி தெளிக்காத பயிர்களில் 25வது நாள் ஒரு களையும், 40 வது நாள் 2வது களையும் எடுக்க வேண்டும். களை எடுக்கும் ஒவ்வொரு முறையும் செடிக்கு மண் அணைத்தால் நல்லது. செடி நட்ட 40 - 45வது நாளில் சப்பை வர ஆரம்பிக்கும்.
40 - 45வது நாளில் 30 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். அதிக காய் பிடிப்பிற்கு 60வது நாளில் பிளானோபிக்ஸ் என்ற பயிர் ஊக்கியை ஏக்கருக்கு 90 மில்லி தெளித்தால் சப்பைகள் உதிர்வது குறையும்.
பருத்தி நுண்ணூட்ட உரக்கலவையை 60வது நாளிலும் 80 வது நாளிலும் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 2 முறை தெளித்தால் அதிக காய் பிடிப்பதற்கு வழிவகுக்கும். பருத்தியில் ரகமாக இருப்பின் 15வது கணுவிலும் வீரிய ஒட்டு ரகமாக இருப்பின் 20வது கணுவிலும் நுனி கிள்ளுதல் அவசியம். இதன் மூலம் அதிக காய் பிடிக்கும்.
மாசிப்பட்டத்தில் சாகுபடி செய்யும்போது செம்மண் நிலமாக இருப்பின் வாரத்திற்கு ஒருமுறை, கரிசலாக இருப்பின் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த 80 - 90 வது நாளில் முதல் அறுவடைக்கு வரும். அதற்கு பின் 7 முதல் 10 நாள் இடைவெளியில் 5 அல்லது 6 அறுவடை செய்யலாம்.
மனோகரன், சஞ்சீவ்குமார்
உதவி பேராசிரியர்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
கோவில்பட்டி
94420 39842
மேலும் படிக்க
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் மட்டுமே விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்!
நவீன தொழில்நுட்பத்தில் தரமான விதைகள் உற்பத்தி செய்தால் கூடுதல் இலாபம்!
Share your comments