தமிழகத்தில் அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ப பயிரிடப்பட வேண்டிய பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்விளக்கப் பண்ணைகள் அமைத்து வேளாண் அறிவியல் நிலையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து அறியும் வகையில் செயல் விளக்க பண்ணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறுகியகால நெல்லிற்கு ஏற்ற ராமநாதரபுரம்
கடலோர கிராம, நகரங்களை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 1.20 லட்சம் ஹெக்டேருக்கு மேல் நெல் பயிரிடப்படுகிறது. வடகிழக்குப் பருவ மழையை நம்பி, நேரடி நெல் விதைப்பு செய்யப்படுவது இம்மாவட்டத்தின் சிறப்பாகும். நெல் அதிக அளவு மழை பெய்யும் போது கண்மாய் பாசனம் மூலம் பராமரிக்கப்படுகிறது. நெல் பருவம் முழுவதும் இறவைப் பாசனம் இல்லாததால், முந்தைய காலங்களில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய குறுகியகால நெல் ரகங்கள் பயிரிடப்பட்டது.
குறைந்து வரும் பாரம்பரிய நெல் ரகம்
பாரம்பரிய நெல் வகைகளை பயிரிடுவது இம்மாவட்டத்தில் தற்போது குறைந்து வருகிறது. குறுகியகால நெல் ரகங்களுக்கு பதிலாக சன்னரக உயர்விளைச்சல் நெல் ரகங்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இதையொட்டி, பாரம்பரிய நெல் வகைகளை இம்மாவட்ட விவசாயிகள் அறியும் வகையிலும், விழிப்புண்வு ஏற்படுத்தவும் ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம், குயவன்குடி அருகேயுள்ள செயல்விளக்கப் பண்ணையில் பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டுள்ளது.
நூற்றிப்பத்து நெல்
-
முந்தைய காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பிரதான நெல் வகையாகும்.
-
ஏக்கருக்கு 1100 கிலோ வரை மகசூல் மற்றும் 1000 கிலோ வைக்கோலும் பெறலாம்.
-
இது வறட்சியைத் தாங்கி மிக உயரமாக வளரக்கூடியது. இதன் அரிசி சிவப்பு நிறமாக இருக்கும்.
வரப்புக்குடைஞ்சான்
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்திரக்குடியில் பயிரிடப்பட்ட பிரதான நெல் வகையாகும்.
-
இது 90 நாட்களில் வளரக்கூடிய குறுகிய கால நெற்பயிர்.
-
ஏக்கருக்கு 1200 கிலோ வரை மகசூல் தரும். நெல்லின் மேல் தோல் கருப்பாகவும், அரிசி சிவப்பாகவும் இருக்கும்.
குறுவைக் களஞ்சியம்
-
இந்த நெல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டது.
-
110 நாட்களில் ஏக்கருக்கு 1000 முதல் 1500 கிலோ வரை தானியமும், 1000 கிலோ அளவுக்கு வைக்கோலும் தரக்கூடியது.
அறுபதாம் குறுவை
-
இந்த ரக நெல் 70 - 80 நாட்களில் வளரக்கூடிய குறுகிய கால நெல் வகையாகும்.
-
இதன் அரிசி சிவப்பாக இருக்கும். ஏக்கருக்கு 600 கிலோ மகசூல் தரும்.
அரியான்
-
இவ்வகை நெல் மாவட் டத்தில் ரெகுநாதபுரம் கடலோர மணற்பாங்கான பகுதிகளில் அதிகம் பயிரிடப்பட்டது.
-
இந்நெல் 120 நாட்களில் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் தரும்.
-
இது வறட்சியை தாங்கி 4 அடிக்கு மேல் மிக உயரமாக வளரக்கூடியது.
சித்திரைக்கார்
-
இவ்வகை மாவட் டத்தில் திருப்புல்லாணி பகுதிகளில் பிரதானமாக பயிரிடப்படுகிறது.
-
இந்நெல் மணற்பாங்கான பகுதியில் மிக உயரமாக வளரக்கூடியது.
-
110 நாட்களில் ஏக்கருக்கு 600 கிலோ மகசூல் தரும். இதன் அரிசி சிவப்பு நிறமாக இருக்கும்.
-
இந்த நெல்லை மட்டை மற்றும் நொறுங்கன் எனவும் அழைக்கின்றனர்.
பூங்கார்
-
இது 90 நாட்களில் வளரக் கூடிய சிவப்பு நிற வகையாகும்.
-
40 நாட்களுக்கு விதை உறக்கம் இருப்பதால் , அதற்கு பின்பே முளைக்கும்.
-
எனவே அறுவடைக் காலத்தில் தொடர்ந்து மழை பெய்தாலும், பயிரிலிருந்து நெல் முளைக்காது.
குறியடிச்சான்
-
இவ்வகை கடும் வறட்சியைத் தாங்கி வயலில் உள்ள குழிகளில் தேங்கும் நீரைக்கொண்டு 110 நாட்களில் வளரும்.
-
ஏக்கருக்கு 700 கிலோ வரை மகசூல் தரும். இதன் அரிசி தடித்து சிறியதாக சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இதுதொடர்பாக வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பி.அருணாச்சலம் கூறுகையில், பாரம்பரிய நெல் வகைகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியைத் தாங்கும் பண்பு மற்றும் மணற்பாங்கான பகுதி களில் பயிரிடப்பட்டு உணவுக்காக பயன்படுத்தப்பட்டது. இவைகளில் இரும்புச்சத்து, தாது உப்புகள், மருத் துவக் குணமும் உடையதாக இருந்தது. இவ்வகை நெல்களில் சாயக்கூடிய தன்மை, குறைந்த மகசூல் தரக்கூடியது. உணவுப்பழக்கத்தில் மாற்றமாக வெள்ளையான சன்ன ரக அரிசியின் பயன்பாடு, சந்தை மாற்றம், விவசாயிகளுக்கு குறைந்த வருமானம் போன்ற காரணங்களால் இப்பாரம்பரிய நெல் வகைகளின் சாகுபடி தற்போது மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது.
மேம்படுத்தப்பட்ட பயிர் ரகங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஏற்ற வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய உயர் விளைச்சல் சன்ன ரகங்களான அண்ணா 4, கோ-53, கோ-51, ஏடீடி 45 ஆகிய ரகங்களும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ளது. இவை மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் குறுகிய கால நெல்லான ஆடுதுறை ரகம் பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப் பட்டது. அதற்கு பதிலாக தற்போது ஏடீடி - 53 என்ற குறுகிய கால ரகம் ஏற்றதாக உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வறட்சியைத் தாங்கி வளரும் குறுகிய கால நெல் ரகங்கள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகளை விவசாயிகள் அறிந்து கொள்ளும் பயிற்சிக்காக ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய செயல்விளக்கப் பண்ணையில் பயிரிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!
Share your comments