பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய காட்டியதில் உள்ளோம். தமிழகத்தின் மொத்த வேளாண் நில பரப்பில் சுமார் 4.5 லட்சம் எக்டர் பரப்பளவு களர் மற்றும் உவர் நிலங்களாகவே உள்ளது. இவ்வகை மண் பெரும்பாலும் செங்கல்பட்டு, சேலம், திருச்சிராப்பள்ளி, வட ஆற்காடு, திருநெல்வேலி, தருமபுரி மற்றும் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6000 எக்டர் களர், உவர் நிலங்கள் உள்ளது.
இந்நிலங்களில் மண்ணின் இயக்கநிலை அதாவது pH மற்றும் நீரில் கரையும் உப்புகளின் அளவு அதிகம் காணப்படுவதால், பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் வெகுவாக குறைந்து விடுகிறது. ஒரு எக்டருக்கு அதிகப் பட்சமாக 1.5 டன் நெல் மகசூல் தான் கிடைக்கிறது. இவை சாகுபடி செலவுக்கே கூட போதுமானதாக இல்லை என்பதே பெரும்பாலான விவசாயிகளின் ஆதங்கம். எனவே இவ்வகை நிலங்கள் தரிசாக ஆடு, மாடு மேயும் நிலங்களாக பயன்படுத்த படுகிறது. எனினும் ஒரு சில விவசாயிகள் மழை காலங்களில் மட்டும் சுமாராக ஒரு பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
களர் உவர் நிலங்களின் தோற்றமும் பண்புகளும்
மண் உற்பத்தியான பாறை வகைகள், உப்பு நீர் பாசனம், மேட்டு நிலங்களிலிருந்து வரும் உப்பு கலந்த கசிவு நீர், நீண்ட கால வேளாண்மை, மண் மேலாண்மைக் குறைபாடுகள் (வடிகால் வசதியின்மை) போன்ற பல காரணங்களால் மேல் மண்ணில் பல்வேறு உப்புகள் தேங்கும் போது சாதாரண மண் உப்பு மண்ணாக உரு மாறுகின்றது.
நிலத்தடி நீர் மண்ணின் நுண்ணிய துவாரங்கள் (Micro pores) மூலம் உறிஞ்சப்பட்டு, மேல் பரப்பில் படிந்து மண்ணின் உப்பு நிலையை அதிகரிக்கச் செய்கின்றது. மழை அல்லது நன்நீர் பாசனம் அதிகம் உள்ள இடங்களில் வடிகால் சரியாக அமைந்தால் மண்ணில் உள்ள உப்பு, நீரில் கரைந்து அடித்தளத்திற்கு செஎறுவிடும் அல்லது நிலப்பரப்பினின்று வெளியேறிவிடும். இந்நிலை இல்லாத போது உப்புக்கள் மண்ணின் அடிப்பரப்பிற்கும் மேல் பரப்பிற்கும் மாறி மாறி சென்று வந்துக் கொண்டு அம்மண்ணிலேயே தங்கிவிடும்.
இவ்வாறு மண்ணின் உப்பு நிலை அதிகரித்து மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பண்புகள் திரிபடைந்து, மண்ணின் வளம் குன்றி சாகுபடிக்கு ஏற்பில்லா நிலை உருவாகின்றது. உப்பு நிலை அதிகரிப்பதால் பாதிப்படைந்த மண்ணை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை
1) உப்பு அதிகமுள்ள உவர் மண்
2) சோடிய அயனிகள் அதிகமுள்ள களர் மண் மற்றும்
3) இரு நிலைகளையும் கொண்ட உவர் களர் மண் ஆகும்.
இந்த வகை களர் உவர் நிலங்களைச் சீர்திருத்த பல தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வகை மண்ணில் பயிர்களுக்கு ஊட்டச் சத்துகள் சரிவர கிடைப்பதில்லை. எனவே, இவ்வகை மண்ணை வளப்படுத்த அதிக அளவில் தொழுஉரம், தழைஉரம், பசுந்தாள் உரம் என இயற்கை உரங்களை இட வேண்டும். மேலும் மண்ணுக்கு மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் வடிவிலும், தழைச்சத்தை அம்மோனியம் சல்பேட் (Ammonium sulphate) வடிவிலும், சாம்பல் சத்தை பொட்டாசியம் சல்பேட் (Potassium sulphate) வடிவிலும் இடுவது அதிக பயனளிக்கும். மேலும் துத்தநாகச் சல்பேட் (Zinc Sulphate) இந்த நிலங்களுக்கு மிக முக்கியம். களர்-உவர் மண்ணுக்கு அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும். மாற்றுக்கால் பாசனம் மிகவும் நல்லது. சொட்டுநீர் பாசனம் (Drip irrigation) மற்றும் தெளிப்பு நீர் பாசனம் (Sprinkler irrigation) நல்ல பயன் தரும். மானாவாரி களர் - உவர் நிலங்களில் பருத்தி, சோளம், வரகு, சூரியகாந்தி போன்ற பயிர்கள் பயிர் செய்து அதிக மகசூலும் லாபமும் அடையலாம்.
களர் - உவர் மண் சீர்த்திருத்தம் செய்வதோடு மட்டுமில்லாமல், பயிர் மண் உர நீர் நிர்வாக முறைகளையும் செவ்வனேக் கடைப்பிடிக்க வேண்டும். எனினும் இவை செலவினமிக்கதாகவும் ஆட்கள் தேவை அதிகமுள்ளதாகவும் இருப்பது இந்நிலங்களைப் பண்படுத்துவதில் தேக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது. நிலம் முழுவதையும் பண்படுத்தாமல் குறிப்பிட்ட இடங்களை மட்டும் பண்படுத்தி பயிர் சாகுபடி செய்வதன் மூலம் இந்நிலங்களை விரைவில் பயனுள்ள நிலங்களாக மாற்ற முடியும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த வகை நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் மனம் தளராமல் வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரையை கேட்டு அவர்களின் ஆலோசனைப்படி வேளாண் தொழில்நுட்பங்களை பின்பற்றி பயனடைய வேண்டும்.
முனைவர் மு.உமா மகேஸ்வரி
உழவியல்,
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,பெரியகுளம்.
Share your comments