மாவுப்பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க சில வழிமுறைகளை வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வழங்கி உள்ளனர். இவ்வகை பூச்சிகள் பெரும்பாலும் பப்பாளி, கொய்யா, மல்பெரி, பருத்தி, வெண்டை, கத்தரி, மரவள்ளி, செம்பருத்தி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களையும், பார்த்தீனியம், தத்தி போன்ற களைகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட தாவரங்களையும் தாக்கி சேதத்தை ஏற்படுத்திக்கிறது. இதனால் 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் இழக்க வாய்ப்புள்ளதால் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பருவ நிலைக்கேற்ப பூச்சிகளின் தாக்குதலும் மாறுபடுகின்றன. வறட்சியும், வெப்பமும் அதிகமாக உள்ள கோடை காலங்களில் மாவுப்பூச்சியின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படும். இவ்வகை பூச்சியின் குறுகிய வளர்ச்சிக் காலமும், அதிக இனப்பெருக்கத் திறனும், அதன் மேல் இருக்கும் மாவு போன்ற பாதுகாப்பு கவசமும் பூச்சிக்கொல்லிகள் ஊடுருவிச் செல்வதைத் தடுப்பதால் இப் பூச்சியைக் கட்டுப்படுத்துவது என்பது சற்று கடினமானது. மாவுப்பூச்சிகளின் தாக்கதலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திட வேண்டும். இதற்கு தாவர மருந்துகள் மற்றும் உயிரியல் முறைகளைப் பின்பற்றலாம்.
தோற்றம் மற்றும் வளர்ச்சி
தாய்பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் வெள்ளை பிசின் பூச்சுடன் 2.2 மி.மீ நீளம், 1-4 மி.மீ அகலத்துடன் காணப்படும். முட்டை வெளிர் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். ஒவ்வொரு முட்டை பையிலும் 100 முதல் 600 முட்டைகள் வரை இருக்கும். அதாவது ஒரு பூச்சி 500 முதல் 600 முட்டைகளை இடும். முட்டை மற்றும் குஞ்சுகள் வளர்ச்சி பருவம் 10 நாட்கள் ஆகும். பெண்பூச்சிகள் 4 பருவநிலையையும், ஆண் பூச்சிகள் 5 பருவ நிலையையும் கொண்டவை. ஒரு வருடத்திற்கு 15 முறை இனப்பெருக்கம் செய்கிறது. இவை வளிமண்டலத்தில் இருக்கும் காற்று, தண்ணீர் மழை, பறவைகள், மனிதர்கள் மற்றும் எறுப்புகள் மூலம் எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவுகின்றன.
கட்டுப்படுத்தும் முறை
- ஒருங்கிணைந்த முறைகளை பின்பற்றி, களைச் செடிகளை சுத்தமாகப் அகற்ற வேண்டும். தாக்கப்பட்ட செடிகள், களைச் செடிகளைப் பூச்சிகள் அதிகம் பரவாமல் முழுவதும் பிடுங்கி அழிக்க வேண்டும். ஆரம்ப காலத்திலிருந்தே பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
- பப்பாளி மாவுப்பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் வெளியிட வேண்டும். கிரிடோலேமஸ் பொறி வண்டின் புழுக்கள் மாவுப்பூச்சியின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் உண்கின்றன. இந்த இரை விழுங்கியை பயன்படுத்தி மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
- தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்பெண்ணெய் 2 சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் அல்லது வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதம் அல்லது மீன் எண்ணெய் சோப் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25கிராம் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். சேதம் அதிகமாக இருக்கும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கவும்.
- ஒரே பூச்சிக்கொல்லியைத் திரும்பத் திரும்பத் தெளிக்காமல், சுழற்சி முறையில் வெவ்வேறு பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம்.
நன்றி: அக்ரி டாக்டர்
Share your comments