பயறு வகைப் பயிர்களில் முதன்மையான பயிராக உளுந்து இருக்கிறது. எனினும் பயறு வகை சாகுபடியில் விவசாயிகள் பெருமளவில் ஆர்வம் காட்டுவதில்லை. பிற தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களுடன் ஒப்பிடுகையில் பயறு வகைகளின் உற்பத்தி திறன் சற்று குறைவாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் பயறு வகை பயிர்களை வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகாவும் சாகுபடி செய்து வருகின்றனர். மண்வளம் மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்க அதன் சாகுபடிப் பரப்பை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும். விவசாயிகளும் பயறு வகை விதைப்பண்ணை அமைப்பதன் மூலம் எளிதல் இரட்டிப்பு லாபம் மற்றும் அரசின் உற்பத்தி மானியம் பெறலாம் என சிவகங்கை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நீர் ஆதாரத்திற்கு ஏற்ப குறுகிய கால பயிர் மற்றும் குறைவான நீர் தேவை கொண்ட பயறு வகை விதைப்பண்ணைகள் அமைத்து பயன் பெறலாம். விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் தேவையான விதைகளை ஆதாரம் மற்றும் சான்று நிலை விதைகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் பெறலாம். தற்சமயம் வேளாண் விரிவாக்க மையங்களில் வம்பன் 8, வம்பன் 6 உளுந்து ரக விதைகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கவனத்திற்கு
விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம்.
விவசாயிகள் விதை வாங்கியதற்கான விற்பனை ரசீது மற்றும் சான்று அட்டை போன்றவற்றை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விதை நேர்த்தி
பயறு வகை விதைகளை விதைப்பதற்கு முன்பாக தலா ஒரு பொட்டலம் (200 கிராம்), ரைசோபியம் (பயறு) நுண்ணுயிர் உரங்கள் 200 மி.லி. பாக்கெட்டை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து அவற்றில் ஓர் ஏக்கருக்குத் தேவையான பயறு விதைகளைக் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். ஏக்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விதையளவுடன் 50 மி.லி. மெத்தைலோ பாக்டீரியா திரவ நுண்ணுயிரியினைக் கலந்து 10 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்கவும். பயிர் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் இடைவெளியில் மறுமுறையும் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் அதிகம் உற்பத்தியாகி கூடுதல் மகசூல் கிடைக்கும். கிணற்று பாசனத்தின் மூலம் போதிய நீர் கிடைக்கவில்லை என்றால் தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் நீரை சேமிக்கலாம்.
ஆய்வு கட்டணம்
பயறு விதைத்து ஒரு மாததிற்குள் அருகில் இருக்கும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி விதை பண்ணையை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு கட்டணமாக ரூ.25ம், விதை பகுப்பாய்வு கட்டணமாக ரூ.30ம், ஒரு விதைப்பு அறிக்கைக்கு செலுத்த வேண்டும். வயலாய்வு கட்டணம் ஏக்கருக்கு ரூ.50 செலுத்த வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் கூடுதல் மகசூல் கிடைப்பதுடன், கூடுதலாக அரசு விவசாயிகளுக்கு பிரிமியம் மற்றும் உற்பத்தி மானியம் வழங்குகிறது. இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Share your comments