தமிழகத்தின் மலை கிராமங்களில் பலாப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெருமாள்மலை, பேத்துப்பாறை, அஞ்சுவீடு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இவை கீழ்மலை கிராமங்கள் என அழைக்கப்படுகின்றன.
இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் பலாப்பழமே அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பலாப்பழம் இங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்படுகிறது.
அவ்வாறு பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பலாப்பழம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால், அவற்றை உடனே விற்பனை செய்ய தமிழக அரசின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர்.
கூடலூர்
இதேபோல் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை, காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. பிற விவசாய நிலங்களிலும் பலா விளைவிக்கப்படுகிறது.
பொதுவாக கூடலூர் பகுதி மக்கள் பலாப்பிஞ்சுகளை சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர உள்ளூரில் விற்பனை செய்யப்படுவதோடு, குறைந்த அளவு வெளியூர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. மேலும் கூடலூரில் பலாப்பழ விளைச்சல் அமோகமாக இருக்கிறது. ஆனால் விளைச்சலுக்கு ஏற்ப பலாப்பழங்களை சந்தைப்படுத்த முடியாத நிலை இருக்கிறது.
அழுகி வீணாகிறது
இதனால் மரங்களில் இருந்து பலாப்பழங்கள் பழுத்து கீழே விழுந்து அழுகி வீணாகும் நிலை காணப்படுகிறது.
சந்தைப்படுத்த நடவடிக்கை (Marketing)
எனவே பலாப்பழங்களை முறையாக சந்தைப்படுத்தவோ அல்லது மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிக்கவோ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பழரசத் தொழிற்சாலை (Fruit juice Factory)
நீலகிரி மாவட்டத்திலேயே கூடலூரில்தான் அதிகளவில் பலாப்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. கூடலூரில் விளையும் பலாப்பழங்கள் உள்ளூர் மக்களின் தேவைக்கு போக மீதி காட்டுயானைகளுக்கு தீவனமாகிறது. இல்லையென்றால் அழுகி நிலத்தில் விழுந்து வீணாகிறது.
விளைச்சல் அதிகம் இருந்தும், முறையாக சந்தைப்படுத்தி லாபம் ஈட்ட முடியாதது வேதனையாக உள்ளது. எனவே சீசன் காலங்களில் பழங்கள் வீணாவதைத் தடுக்க பழரச தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று என்பதே பலாப்பழ விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் விளைவிக்கப்படும், பலாப்பழங்களைக் கொண்டு பழரசம் தயாரித்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக அம்மாநிலத்தில் பழரத் தொழிற்சாலை இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு
Share your comments