தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் சாலையில் கொட்டப்பட்டு, விவசாயிகள் நஷ்டமடையும் சூழலில், தொலைதூர நகரங்களில் அதிக விலைக்கு வாங்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்தநிலையை அரசுதான் சரிசெய்ய வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். குளிர்பதனக் கிடங்குகளை (Refrigerated warehouses) விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் இந்த நிலை மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 மடங்கு விலை
தமிழகத்தில் ஆந்திர, கர்நாடக எல்லைப் பகுதிகளான கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் தக்காளி அதிகம் விளைவிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கும் இப்பகுதிகளில் இருந்தே அதிக அளவில் தக்காளி வருகிறது. இது, பல வியாபாரிகள் (Merchants) கைமாறி, சென்னையில் உள்ள வாடிக்கையாளரிடம் வந்தடையும்போது சுமார் 10 மடங்கு விலை கூடிவிடுகிறது. அந்த விலை விவசாயிகளுக்கு கிடைக்காததால், இன்றும் விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு தருமபுரியில் தக்காளி சந்தையில் கிலோ ரூ.1-க்குகூட வாங்க ஆள் இன்றி, சாலையில் கொட்டப்பட்டது. அதே நாளில் சென்னையில் சில்லறை விற்பனையில் (Retail) ஒரு கிலோரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது. இவ்வாறு ஆண்டில் 4 மாதங்களாவது நடந்துவிடுகிறது. நேற்றுகூட கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.26-க்கு விற்கப்பட்டது. வெளியில் சில்லறை விலையில் ரூ.35-க்கு விற்கப்படுகிறது. இதுபோல பல நேரங்களில் கத்தரிக்காய் போன்ற காய்கறிகளும் விலை போகாமல் கொட்டப்படுகின்றன. அதே நேரம், மாநகரங்களில் (Municipalities) அவற்றின் விலை கடுமையாக உள்ளது.
விற்பனை நிலையம்:
அரசிடம் கூட்டுறவு கொள்முதல் நிலையங்கள், வேளாண் விற்பனை நிலையங்கள் (Agricultural sales center) போன்றவை உள்ளன. விலைபோகாத காய்கறிகளை இவற்றின் மூலம் வாங்கி, விலை அதிகம் விற்கப்படும் மாநகரங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகள் (Farm Green Store), நகரும் கடைகள், நியாயவிலைக் கடைகளில் விற்கலாம்.
போக்குவரத்து
காய்கறிகள் விலை உயர்வுக்கு போக்குவரத்து (Transportation) முக்கிய காரணமாக உள்ளது. அரசு நினைத்தால் காய்கறிகளை இலவசமாக அரசுப் பேருந்துகளில் சென்னைக்கு கொண்டுவர முடியும். இவ்வாறு செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், மாநகரங்களில் வசிப்போருக்கும் மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்கும். அரசிடம் இவ்வளவு கட்டமைப்புகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குளிர்பதன கிடங்குகள்
தக்காளிக்கு நல்ல விலை கிடைக்க, பருவம் இல்லாத காலங்களில் தக்காளி பயிரிட அரசு சார்பில் மானியம் (Subsidy) வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. மதிப்புக் கூட்டுபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு கற்றுத்தரப்படுகிறது. ஓசூர், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி உள்ளிட்ட 10 இடங்களில் ரூ.482 கோடியில் குளிர்பதன கிடங்குகள் அமைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலைபோகாத காலங்களில் காய்கறிகளை விவசாயிகள் அதில் வைத்து பயன்பெறலாம். இவற்றை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டால், விலை போகாமல் காய்கறிகளை கீழே கொட்டும் நிலை வராது. இந்த காய்கறிகளை கூட்டுறவுத் துறை, தோட்டக்கலைத் துறை (Horticulture Department) மூலம் வாங்கி, மாநகரப் பகுதிகளில் மலிவு விலையில் விற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அதிகாரிகள் கூறினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கரும்பு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் எத்தனால் உயிரி உரம் உற்பத்தி!
குப்பைகளை மறுசுழற்சி செய்து, இயற்கை உரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம்!
Share your comments