ஒரு பயிரை சாகுபடி செய்து, அந்த நிலத்திலேயே மடக்கி உழுது விட்டால் அதற்கு பசுந்தாள் எரு என்று பெயர். பசுந்தாள் எருவாக பயன்படும் தாவரங்கள் தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, சணப்பு மற்றும் பில்லி பெசரா. பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி பயிருக்கு இடும் போது மண் வளம் காக்கப்படுகிறது. ரசாயன உரத் தேவையைக் குறைத்து சாகுபடி செலவை (Cultivation amount) குறைக்கிறது.
பசுந்தழை உரங்கள்
பசுந்தழை உரங்கள் என்பது புங்கம், கிளைரிசிடியா, எருக்கு, வேம்பு, பூவரசு மற்றும் பல்வேறு மரங்களிலிருந்து தழைகளை சேகரித்துக் கொண்டு வந்து வயலில் இட்டு மட்க வைப்பது.
பசுந்தாள் உரங்களின் தழைகள் மண்ணில் பல்வேறு நுண்ணுயிர்கள் மூலம் மட்கப்படுவதால் தழைகளில் உள்ள பேரூட்ட, நுண்ணூட்ட சத்துகள் வெளியாகி மண்ணில் உள்ள ஊட்டச்சத்தின் அளவை கூட்டி பயிரைச் செழிக்க செய்கின்றன. அதில் உள்ள அமிலங்கள், வளர்ச்சி ஊக்கிகள், நொதிகள் மற்றும் மாவு பொருட்களும் வெளியாகி மண்ணை வளமாக்குகின்றன .
கோடை மழை (Summer Rain) பெய்யும் போதும், பாசன நிலங்களில் போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்கும் போதும் தக்கைப்பூண்டு விதைப்பு செய்யலாம். எந்த பருவத்திலும் விதைப்பு செய்யலாம். கோடையில் வளர்க்கப்படும் பசுந்தாள், அதிகமான தாள் பாகத்தையும் தழைசத்தையும் தரவல்லது. பசுந்தாள் உரங்கள் விதைக்கும் போது ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் விதைத்து, 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும். பசுந்தழை உரங்கள் எனில் ஏக்கருக்கு 2 டன் அளவில் தழைகளை சேகரித்து மட்க வைக்கலாம்.
பசுந்தாள் பயிர்கள் வளிமண்டல தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் பாக்டீரியாக்களின் (Bacteria) உதவியால் நிலைப்படுத்தி நிலத்தை வளமாக்கும். மண்ணில் தழைச்சத்து அதிகரித்து அடுத்து வளரும் பயிருக்கு தழைச்சத்து எளிதில் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு ஒன்பது டன் என்ற அளவில் தாள் பாகம் கிடைப்பதால் நெற்பயிரின் 30 சதவீத தழைச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது
பசுந்தாள் மட்கும் போது வெளிப்படும் கந்தக அமிலம் மணிச்சத்து உரத்தை கரைத்து பயிருக்கு கிடைக்க செய்கிறது. களர் மற்றும் உவர் நிலங்களில் நன்கு வளர்ந்து நிலத்தை சீராக்கும்.
பயிர் சாகுபடி
அடுத்த பயிர் சாகுபடி செய்வதற்கு முன் நிலத்தை தரிசாக விடாமல் பசுந்தாள் பயிர்கள் மூடுபயிராக வளர்ந்து மண்ணின் ஈரம் (Soil Moisture) பாதுகாக்கப்படுகிறது. சத்துக்கள் நீரில் கரைந்து நிலத்தை விட்டு செல்லாமல் கிரகித்து வைத்துகொள்ளும். களைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள அங்ககப் பொருட்களின் அளவு அதிகரிக்கிறது. அடுத்து வளரும் பயிரின் விளைச்சலை அதிகரிக்கும்
பசுந்தாள் உரப்பயிர்களின் வேர்கள் மண்ணில் ஊடுருவி மழை, காற்றால் ஏற்படும் மண் அரிப்பை (Soil Erosion) கட்டுப்படுத்தும். பசுந்தாள் உரமிட்ட நிலங்களில் நுண்ணுயிரிகள் எண்ணிக்கை பெருகும். இதனால் கார்பானிக் அமிலம் மண் துகள்களில் பொதிந்திருக்கும் சத்துப் பொருட்களை கரைத்து பயிருக்கு கிடைக்க செய்யும்.
தக்கைபூண்டு
தக்கைபூண்டு எவ்வகை நிலத்திலும் பயிராகும். வடிகால் வசதியற்ற நிலங்கள், வறண்ட நிலங்களில் நன்கு வளரும். ஏக்கருக்கு 20 கிலோ விதை தூவ வேண்டும். 40 - 45 நாட்களில் பூக்க ஆரம்பிக்கும் போது சுழற்கலப்பை அல்லது கேஜ்வீல் கொண்டு மடக்கி உழலாம். சணப்பு வடிகால் வசதி உள்ள இடங்களில் நன்கு வளரும். விதைத்த ஏழு வாரங்களில் பயிரை நிலத்தில் மடக்கி உழலாம்.
கொளுஞ்சி
வறட்சியைத் தாங்கி வளரும். மாடுகள் மேயாது. நான்கு மாதங்களில் 300 முதல் 4000 கிலோ வரை தழை உரம் கிடைக்கும். மணிலா அகத்தி தண்டு பாகத்தில் தழைச்சத்தை கிரகிக்கும் முடிச்சுக்களை கொண்டுள்ளது. நீர் தேங்கும் இடங்களில் நன்கு வளரக் கூடியது. கோடைகாலத்தில் வளர்ச்சி வேகம் அதிகம். பில்லி பெசரா தானிய பயிராகவும் மாட்டு தீவனமாகவும் (Cows Fodder), எருவாகவும் பயன்படுத்தலாம். பயிர் நன்கு வளர்ந்து ஓரிரு முறை வெட்டி தீவனமாக பயன்படுத்திய பின் தழை உரமாக பயன்படுத்தலாம்.
கிளைரிசிடியாவை வரப்பு ஓரங்களிலும் காலி இடங்களிலும் ஒட்டுபயிர் செய்யலாம். மரமாக வளரும், ஆண்டுக்கு இரு முறை இதிலிருந்து தழை காம்புகளை வெட்ட உரமாக பயன்படுத்தலாம் புங்கம் மரத்தின் பசுங்கிளைகளை ஆடி ஆவணி மாதங்களில் நிலத்திற்கு உரமாக உபயோகிக்கலாம். வேம்பு, எருக்கு, பூவரசு முதலிய மரங்களில் தழைகளையும் பசுந்தழை உரமாக பயன்படுத்தலாம்.
பானு பிரகாஷ்
வேளாண்மை உதவி இயக்குனர்
நயினார்கோவில்
ராமநாதபுரம்
94430 90564
Share your comments