கோடை மழை காரணமாக பொள்ளாச்சி பகுதிகளில் காய்கறி மற்றும் பழப் பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவது குறித்து, தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அக்னிவெயில் சுட்டெரித்து வருவதால், வெப்பச்சலனம் காரணமாக கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதன் காரணமாக, பொள்ளாச்சி கிணத்துக்கடவு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்பட்டுள்ள காய்கறிகளில் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் மகசூல் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காய்கறிகளை தாக்கும் பூச்சிகள்
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் தக்காளி, வெள்ளரிக்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த வகை காய்கறிகளில் பழ ஈ பூச்சிகள் தாக்கி வருகிறது. பழ ஈக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஈ தாக்கப்பட்ட காய்கறிகளின் மேல் வெளிரிய மஞ்சள் நிற புள்ளிகள் காணப்படும். அதன் நடுப்பகுதியில் கருப்பான புள்ளி தெரியும். காய்கறிகளை கைகளால் அழுத்தும் போது அதிலிருந்து ஒரு அழுகிய திரவம் வெளிவரும்.
பழ ஈக்கள் தாக்கும் விதம்
தாய் பழ ஈக்கள் காய்கறிகளையும், பழங்களையும் துளைத்து உள்ளே முட்டையிடும், பின் ஒரு நாளில் இது பொரித்து புழு நிலையை அடையும், இந்த புழு ஆனது ஆறு முதல் முப்பத்தி ஐந்து நாட்கள் வரை வாழும். பின் கூண்டு பருவநிலையை அடையும்போது மண்ணுக்கடியில் சென்று தங்கிவிடும், அங்கு 10 முதல் 12 நாட்கள் வரை கூண்டு பருவத்திலிருந்து வளர்ந்து, பழ ஈயாக மாறும். பழ ஈயானது நாள் ஒன்றுக்கு 20 முட்டைகள் வரை இடக்கூடியது. இதனால் பழ ஈக்களை கட்டுப்படுத்துவது என்பது விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது.
பூச்சி தாக்குதலால் பயிர்களுக்கு வரும் நோய்கள்
பழ ஈக்கள் மற்றும் பூச்சி தாக்குதலால் காய்கறி பயிர்களுக்கு சாம்பல் நோய், இலைப்புள்ளி நோய், கரும் பூஞ்சாண நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்படுகிறது.
சாம்பல் நோய்: இந்த நோய் தாக்கப்பட்டால் இலைகள் சாம்பல் நிறமாகி காணப்படும்.
இலைப்புள்ளி: இந்த நோய் தாக்கப்பட்டால் இலைகளில் கரும்புள்ளி காணப்படும்.
கரும் பூஞ்சாண நோய்: இலைகளின் மேற்பரப்பில் கருமையான படலம் தோன்றி, இலைகள் கருப்பாகத் தென்படும்.
தோட்டக்கலை அறிவுரை
பழ ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
- பூச்சி தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்ட காய்கறிகளை உடனடியாக பறித்து, மண்ணில் புதைத்து அழிக்க வேண்டும்.
- வெல்லக் கரைசல் 5 மில்லி, மற்றும் குளோர்பைரிபாஸ் 5 மில்லி அல்லது நொதித்த பனஞ்சாறு 100 மில்லி, மற்றும் மாலத்தியான் 5 மில்லி கலந்து மண் பானைகளில் நிரப்பி பல இடங்களில் வைத்து ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
- பூச்சி மருந்து கடைகளில் கிடைக்கும், பழ ஈ கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் நிறுவி ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
- அடிக்கடி நீர் பாசனம் செய்வதன் மூலம், மண்ணில் உள்ள பழ ஈக்களின் முட்டைகள் பொரிக்க முடியாமல் அழியும், மேலும் கூட்டுப்புழு பருவத்தில் உள்ளவை வெளியே வர முடியாமல் பூச்சிகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும்.
தோட்டக்கலைத்துறையின் இந்த அறிவுரைகளை பின்பற்றி விவசாய பெருமக்கள் அதிக மகசூலை ஈட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
Daisy Rose Mary
Krishi Jagran
Share your comments