பெங்களூரூ நகரை சுற்றியுள்ள பகுதிகளில், ஏரி நீரைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பயிர்களில் அதிக அளவு உலோகங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உணவுப் பொருட்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் போது விஷமாகும் ஆபத்து உள்ளதாக ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் விஷமான ஏரிகள்
பெங்களூரைச் சுற்றியுள்ள ஏரிகளான மார்கொண்டனஹள்ளி, எலே மல்லாபா ஷெட்டி (ஒய்.எம்.எஸ்), ஹோஸ்கோட் தொட்டகெரே, வர்தூர், பைரமங்கலா மற்றும் ஜிகினி ஏரிகள் போன்றவற்றின் நீர்ப்பாசன பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் கனரக உலோக கலவைகளின் அளவு அதிகரித்துள்ளன. இது ஒன்றும் புதிதல்ல.
2017 ஆம் ஆண்டிலும், பெல்லந்தூர் மற்றும் வர்தூர் ஏரிகளை புனரமைக்க அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு, சிறிய அளவிலான சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் ஏரிப் பகுதியைச் சுற்றியுள்ள மண் நச்சு உலோகத்தால் சூழப்பட்டிருப்பதை கண்டறிந்தது. இந்த பகுதிகளில் மேயும் கால்நடைகளிலிருந்து வரும் பால் கூட அதை குடிப்போருக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் அப்போது கூறியிருந்தனர்.
சமீபத்திய ஆய்வு
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுக்காக கீரைகள் தக்காளி, நெல் மற்றும் பீட்ரூட் போன்றவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பயிர்களாகும். சேகரிக்கப்பட்ட அனைத்து பயிர் மாதிரிகளிலும் அதிக அளவு குரோமியம், காட்மியம் மற்றும் நிக்கல் இருந்தன. அவை இந்திய தரநிலைகளின் (ஐ.எஸ்) கீழ் அனுமதிக்கப்படுகின்றன என்றபோதிலும் ஐரோப்பிய ஒன்றிய தரத்தின்படி ஒரு கிலோ பயிருக்கு 0.2 மி.கி.க்கு குறைவாக இருக்க வேண்டிய குரோமியம் ஒரு கிலோ பயிருக்கு 20 மி.கி என்ற அளவுக்கு உள்ளது.
காய்கறியில் அதிகரிக்கும் உலோக கலவை
இதுதொடர்பாக பெங்களூர் விவசாய வேதியியல் மற்றும் மண் அறிவியல் துறை விஞ்ஞானி, என்.பி.பிரகாஷ் கூறியதாவது, "எங்கள் மதிப்பீட்டில் அதிக அளவு காட்மியம், குரோமியம் மற்றும் நிக்கல் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். இந்த ஏரிகளில் இருந்து வரும் தண்ணீரை விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு பாசனம் செய்ய பயன்படுத்தும்போதும், ஏரியின் வண்டல்களை தங்கள் மண்ணை உரமாக்குவதற்குப் பயன்படுத்தும்போது, உலோகங்கள் உணவுச் சங்கிலியில் சேர்கின்றன என்றார்.
உடல்நல பாதிப்புகள்
அதிகப்படியான குரோமியம் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு, ரத்தத்துடன் அடிக்கடி வாந்தி போன்ற இரைப்பை குடல் நோய் அறிகுறிகளை இது ஏற்படுத்தும். எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கிறது. நிக்கல் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, மூக்கு சைனஸ் அல்லது புற்றுநோய் போன்ற சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவத் துறையினர். இந்த வகை உணவுகளை நீண்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்ளும் போது விஷமாகும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க...
வன்முறையில் முடிந்த டிராக்டர் பேரணி! - விரைவில் அடுத்தகட்ட ஆலோசனை முடிவு - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!!
பயிர்கள் சேதமடைந்து நஷ்டமடைந்த போதிலும், மாடுகளுக்கு தீவனம் அளிக்க அறுவடை செய்யும் விவசாயிகள்!
Share your comments