தமிழகத்தில் கோடை மழையை பயன்படுத்தி பெரும்பாலான பகுதிகளில் மானாவாரி சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலங்களில் பயிறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியன அதிக அளவில் சாகுபடியாகிறது. இம்முறை துவரை சாகுபடியை அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையினர் அதிக மகசூல் தரும் ரகங்களை, குழித்தட்டு நாற்றுகள் மூலம் உருவாக்கி மானிய விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
ஓசூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பூதிநத்தம், சூதாளம், முகளூர், ஆவலப்பள்ளி, பஞ்சாட்சிபுரம், கொளதாசபுரம், பலவனப்பள்ளி, சூடுகொண்டப்பள்ளி, நந்திமங்கலம் மற்றும் முதுகானப்பள்ளி போன்ற கிராமங்களில் 1000 மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த மானாவாரியில் துவரையின் சாகுபடியை கனிசமாக உயர்த்தவும், உற்பத்தி செலவை குறைக்கவும், வேளாண்துறை சார்பில் பிஆர்ஜி-1, பிஆர்ஜி-2, பிஆர்ஜி-5 மற்றும் சிஓபி ஆகிய ரகங்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. மேலும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் 50% மானிய விலையில், வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வேளாண் துறை சார்பில் அதிக மகசூல் தரும் பிஆர்ஜி-1 மற்றும் பிஆர்ஜி-2 ரகங்களை குழித்தட்டு முறையில் விதைப்பு செய்து நாற்றுகளாக விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
விவசாயிகளுக்கான அறிவுரை
- இந்த ரகத் துவரையை முதன்மை பயிராகவும் அல்லது அனைத்து விதமான பயிர்களின் வரப்புகளிலும் 3 அடி இடைவெளி விட்டு வரப்புப் பயிராகவும் சாகுபடி செய்யலாம்.
- நடவு செய்த 20-ஆம் நாளில் கைக் களை எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். 20 முதல் 30ஆம் நாள் ஒருமுறையும், 50ஆம் நாள் இரண்டாவது முறையும் செடியின் நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்கக் கிளைகள் தோன்றி 5 மாதங்களில் நன்கு பூ பூக்க துவங்கும்.
- அதிகப்படியான தண்ணீர் அல்லது போதிய நீர்ப்பாசனம் இல்லாமை ஆகிய இரண்டும் பயிரின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே நடவின் போதும், பூக்கள் பூக்கும் போதும், காய்கள் தோன்றும் போதும் தேவையான தண்ணீர் பாய்ச்சுவது மிக அவசியம்.
- அதிக மகசூல் பெற நடவு செய்த 30ஆம் நாள் ஜீவாமிர்த கரைசலையும், பூக்கும் தருணத்தில் பஞ்சகாவ்ய கரைசலையும், தெளிக்க வேண்டும். அல்லது 2% டீஏபி கரைசலை இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். இதனால் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாகி, ஓரு செடியிலிருந்து 3 கிலோ வரை அறுவடை செய்ய முடியும்.
குழித்தட்டு துவரை நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள உதவி மற்றும் துணை வேளாண்மை அலுவலர்களை அணுகும்படி கேட்டுக் கொண்டார்.
Share your comments