திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்ப முறையில் சம்பா நெல் சாகுபடி (Paddy Cultivation) செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,தற்போது விவசாயிகள் சம்பா பருவ நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகிறார்கள்.
சம்பா நெல் சாகுபடிக்கு ஆடுதுறை 49, ஆடுதுறை 39, சி.ஆர் 1009 போன்ற இரகங்களைச் சாகுபடி செய்யலாம். திருந்திய நெல் சாகுபடி முறையில் இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்திட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருந்திய நெல் சாகுபடி
திருந்திய நெல் சாகுபடி முறையில் 40-50 சதம் வரை நீர் மிச்சப்படுத்தப்படுகிறது. சீரான இடைவெளி, அதிக தூர்கட்டும் திறன், குறைவான பூச்சி நோய் தாக்குதல், நெல் மணிகளின் எண்ணிக்கை மற்றும் மணிகளின் எடை அதிகரித்தல் போன்ற நன்மைகள் கிடைக்கிறது. எனவே, திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்வதால் வழக்கமான முறையில் நெல் சாகுபடியில் கிடைப்பதை விட கூடுதல் மகசூல் கிடைக்கும்.
திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்:
தரமான சான்று பெற்ற உயர்விளைச்சல் இரங்களை பயன்படுத்துதல், ஒரு ஏக்கர் நடவு செய்ய இரண்டு கிலோ விதை போதுமானது. ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு சென்ட் நாற்றங்கால் மட்டும் போதுமானது. 14 நாட்கள் வயதான இளம் நாற்றுக்களை நடவு செய்வதால் அதிக தூர்கள் பிடிக்கிறது. நன்கு சமன் செய்யப்பட்ட நடவு வயல் தயார்செய்தல், 22.5 செ.மீ. ஒ 22.5 செ.மீ. இடைவெளியில் நடவுசெய்தல், இடைவெளிக்கு மார்க்கர் கருவி பயன்படுத்த வேண்டும். குத்துக்கு ஒரு நாற்று வீதம் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.
Also Read : அழிவின் விளிம்பில் உள்ள பனைமரங்களை காக்க நடவடிக்கை!
நீர் மறைய நீர் பாசனம் செய்ய வேண்டும். வயலில் 2.5 செ.மீ.-க்கு அதிகமாக நீர் நிறுத்த தேவையில்லை. இதனால் நீர் தேவை பெருமளவு குறைகிறது. கோனாவீடர் என்ற களையெடுக்கும் கருவியினைக் கொண்டு நடவு செய்த 10ம் நாள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை வீதம் நான்கு முறை வயலில் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டி களைகளை மண்ணிலேயே அமிழ்த்தி இயற்கை உரமாக மாற்றுவதோடு மண்ணை கிளறி விடுவதால் தூர்கள் அதிகம் பிடித்து மகசூல் கூடுகிறது. இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தேவையான தழைச் சத்தை மேல் உரமாக இடுவதால் உரத் தேவையினையும் குறைக்கலாம்.
இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட திருந்திய நெல் சாகுபடி முறையினை புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில் கடைபிடித்து குறைந்த தண்ணீர் மற்றும் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெறவும், இது குறித்து மேலும் கூடுதல் விபரங்களுக்கு புதுக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று பயன்பெறுமாறு புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments