கோவை மாவட்டம், காரமடை, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்க பெருநத்தைகள் அதிகம் காணப்படுகின்றன. ஆப்பிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச சங்கத்தின் (ஐ.யூ.சி.என்), தெற்காசிய, முதுகெலும்பற்ற உயிரினங்கள் ஆய்வுக் குழுவின் இணைத் தலைவர், அய்யாசாமி டேனியல் பல தகவல்களை கூறியுள்ளார்.
காட்சிப்படுத்த:
'அகாடினா பியூலிகா' என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த வகை நத்தைகள், கென்யா, தான்சானியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க பகுதியைச் சேர்ந்தது.கடந்த 1871ல் கொல்கட்டா, பரக்பூரில் விலங்கியல் பூங்காவில் காட்சிப்படுத்துவதற்காக, ஆங்கிலேயர் ஒருவரால் கொண்டு வரப்பட்டது. தற்போது, ம.பி., தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் தென்படுகின்றன.
விவசாயிகளின் எதிரி (Enemy For Farmers)
இந்தியாவில் மொத்தம் 5,017 வகை நத்தைகள் உள்ளன. இவற்றில் 1,103 வகை நத்தைகள் தரைவாழ்விகள். பொதுவாக, 7 செ.மீ. அகலம், 20-22 செ.மீ., நீளமுடையது. நன்கு வளர்ந்த நத்தை 200 முதல் 250 கிராம் எடை இருக்கும். 3 - 6 ஆண்டுகள் உயிர் வாழும். போதுமான ஈரப்பதம், உணவு இல்லாவிட்டால், 2 ஆண்டுகள் வரை, ஓட்டுக்குள் உடலைச் சுருக்கிக் கொண்டு, ஆழ் உறக்கத்துக்குச் சென்றுவிடும். மழை வந்ததும் மீண்டு விடும்.
200 முதல் 900 முட்டைகள் இடும். ஏறத்தாழ அனைத்து முட்டைகளும் பொரித்து விடும். குறுகிய நேரத்தில் அதிக பரப்பிலான வேளாண் பயிர்களை தின்று தீர்த்து விடும். எந்த வகை இலை, தழையாக இருப்பினும் உண்ணும். சுண்ணாம்புச் சத்துக்காக, கான்கிரீட்டில் உள்ள சில பகுதிகளையும் உண்டு செரிக்கும் திறன் கொண்டவை.
கட்டுப்படுத்துவது எப்படி? (How to Control)
இந்த வகை நத்தைகளை பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தி அழிப்பது சிரமம். புகையிலையை நீரில் போட்டு சாறு எடுத்து, காப்பர் சல்பேட் கரைசலுடன் சேர்த்து, தெளித்து கட்டுப்படுத்தலாம். நன்னீர் வாழ்வி என்பதால், உப்பைத் துாவி, கட்டுப்படுத்தலாம். ஆனால், மண் வளம் பாதித்துவிடும் எனவே, பப்பாளி, முட்டைக்கோஸ் நத்தை விரும்பி உண்ணும் என்பதால் குழி தோண்டி, இந்த இலைகளைப் போட்டு, கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.
மேலும், பூச்சிக் கொல்லி பயன்படுத்தாமல், மனித உழைப்பில் சேகரித்து, அழிப்பதே இப்போதைக்கு நல்ல வழிமுறை. சேகரித்து அழிப்பதன் மூலம், மற்ற வகை நத்தைகளும் பிற சிறு உயிரினங்களும் பாதிப்படையாமல் காக்கலாம்.
பருவநிலையை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவை. பெரும் மழையை முன்கூட்டியே உணர்ந்து, உயரமான கட்டடங்கள், மரங்களின் உச்சிக்கே ஏறிவிடும். இதயநோய்க்கு மருந்து எடுக்கும் ஆய்வுகளும் நடக்கின்றன. இவ்வாறு, பூச்சியில் நிபுணர் அய்யாசாமி டேனியல் தெரிவித்தார்.
மேலும் படிக்க
Share your comments