மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் பருத்தியை தாக்கி வரும் மாவுப்பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார். பருத்தி விவசாயிகள், வேளாண் துறையின் ஆலோசனையை ஏற்று திறம்பட செயல்பட வேண்டும்.
ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பரவலாக பல இடங்களில் பருத்தி பயிர் (Cotton crop) செய்யப்பட்டுள்ளது. பருத்தி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் தென்படுகிறதா? என்று ஆராயும் வகையில் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் கொள்ளிடம் அருகே உள்ள சோதியகுடி கிராமத்தில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ள வயலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவுப்பூச்சிகள் தாக்குதல்
பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள பருத்தி விவசாயிகளிடம் கூறுகையில், கோடை காலத்தில் வறண்ட வானிலை நிலவுவதாலும் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினாலும் பருத்தியை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கி சேதத்தை உண்டாக்கும். காற்று, மனிதர்கள், பறவைகள் மூலமாகவும், நீர்ப்பாசனம் (Irrigation) செய்யும் போதும் இந்த மாவுப்பூச்சிகள் எளிதில் பரவுகின்றன. இவைகள் பருத்தி இலை, மற்றும் தண்டில் உள்ள சாற்றை உறிஞ்சி செடியை சேதப்படுத்துகின்றன.
கட்டுப்படுத்தும் முறை
மாவுப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வயலில் காணப்படும் களைகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வயலில் போதுமான அளவு ஈரப்பதம் (Moisture) காணப்படும் போது இந்த பூச்சி தாக்குதல் குறைந்து காணப்படும். தாவர வகை மருந்துகளான வேப்பெண்ணெய் (Neem oil) இரண்டு சதம் அதாவது, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் அல்லது வேப்பெண்ணெய் கரைசல் 5 சதம் பயன்படுத்தி அல்லது மீன் எண்ணெய், சோப்பு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். எனவே தாவர வகை மருந்தை பயன்படுத்தி ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம் என்றார். உதவி விதை அலுவலர் தனசேகர் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
மேலும் படிக்க
கொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
கடலூரில் அமோக விளைச்சலைத் தரும் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி!
Share your comments