உரப்பாசனம் என்பது, உரங்களை சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு இடுவது. இதன் மூலம் உரத்தேவை 25 சதவீதம் வரை குறைவதுடன் அதன் உபயோகிப்பு திறன் அதிகரிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கேற்ப உரஅளவை பங்கிட்டு அளிக்கலாம். 60 லிட்டர் முதல் 90 லிட்டர் கொள்ளளவுள்ள உரத்தொட்டியை சொட்டுநீர் பாசன (Drip Irrigation) அமைப்பின் பிரதான குழாய்களின் வடிகட்டிக்கு முன் இணைக்க வேண்டும். பாசன நீரின் ஒரு பகுதி மட்டுமே உரத்தொட்டியுள் சென்று உரக்கரைசலுடன் வெளியேறி பிரதான குழாய்கள் மூலம் செடிகளுக்கு செல்கிறது. இதன் விலை ரூ.4000 வரை ஆகிறது.
குறைந்த பராமரிப்பு
இதை நிறுவுவது எளிது. குறைந்த பராமரிப்பு போதும். உரங்களை மாற்றுவது எளிது. நீர்ப்பாசன குழாயின் அழுத்தத்தை உரத்தொட்டி தாங்க வேண்டும். வென்சுரி கருவி மூலம் செல்லும் போது அழுத்த குறைவால் உரக்கரைசல் உறிஞ்சப்பட்டு பயிர்களுக்கு அருகில் செலுத்தப்படுகிறது. இதை பிரதான குழாய்க்கு முன்பாக இணைக்க வேண்டும். இதன் விலை ரூ.188. இதில் அழுத்தக்குறைவு அதிகம் ஏற்படும். சிறு விவசாயிகளும் எளிதாக பயன்படுத்தலாம். சிறிய பரப்பளவுக்கு பொருத்தமானது.
உரம் செலுத்தும் கருவியானது கரைசலை தொட்டியிலிருந்து உறிஞ்சி பிரதான குழாயுள் அழுத்தத்துடன் செலுத்துகிறது. நீர், உரக்கரைசலின் விகிதம் ஒரே சீராக இருக்கும். இதன் விலை ரூ.14ஆயிரம். இதில் ஒவ்வொரு செடிக்கும் உரம் கிடைப்பது முறையாக பராமரிக்கப்படுகிறது. ஆட்டோமேஷன் செய்வது எளிது.
உரப்பாசன கருவி
சூப்பர் பாஸ்பேட், டை அமோனியம் பாஸ்பேட் உரங்களை உரப்பாசன கருவிகளில் பயன்படுத்தினால் நீரில் கரையாது. அடைப்பை ஏற்படுத்தும். பாசனநீர் அமிலத்தன்மையாக இருந்தால் பாஸ்பாரிக் அமிலத்தை பயன்படுத்த வேண்டும். ஜிப்சம், சுண்ணாம்பு சத்தையும் உரப்பாசன கருவி மூலம் அளிக்கக்கூடாது. உரக்கரைசல் செலுத்தும் முன்பு 20 நிமிடங்களும் கரைசல் செலுத்திய பின் தொடர்ந்து 15 நிமிடங்கள் சொட்டுநீர் அமைப்பை இயக்க வேண்டும். இதனால் குழாய்களில் உரப்படிவு ஏற்படுவதை தவிர்க்கலாம். நீராதாரத்தில் உரக்கரைசல் கலப்பதை தவிர்க்க ஒரு வழிஅடைப்பானை பிரதான குழாய் முன்பாக இணைக்க வேண்டும்.
ஆனந்தராஜ், தலைவர்
ராமச்சந்திரன், கல்வி உதவியாளர்
வேளாண்மை பொறியியல் துறை மதுரை விவசாய கல்லுாரி
94871 14632
மேலும் படிக்க
Share your comments