தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது மண்ணையும், நிலத்தடி நீரையும் பெருமளவில் பாதிக்கிறது. இதனால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உற்பத்தியிலும், உணவிலும் நச்சு கலக்கும் அபாயம் அதிகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் மண் வளம் குன்றி, நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இக்கழிவு நீரில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் நச்சுத் தன்மையுடைய வேதி வினைப் பொருட்களும் கலந்துள்ளன. இக்கழிவு நீரை சரியான முறையில் அப்புறப்படுத்தாததன் மூலம் மண் மற்றும் நீரில் மாசுபாடு ஏற்படுகின்றது.
இந்த கழிவு நீரை அதிக செலவின்றி சுத்தீகரிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் "தாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்" என்ற முறையை கண்டுபிடித்துள்ளது. இந்த முறையானது குறைந்த செலவில் சிறு, குறு மற்றும் பெருந் தொழில் நிறுவங்கள் பயன்படுத்தலாம்.
தற்போதுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு முறைகள் மிகுந்த செலவுடையதாக உள்ளன. தாவர படுக்கை சுத்திகரிப்பு முறை சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், குறைந்த செலவினை உடையதாகவும் உள்ளது.
பயன்பாடுகள்
தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை மற்றும் காகித தொழிற்சாலை ஆகியவற்றின் கழிவுநீரை சுத்திகரிக்க பயன்படுத்தலாம்.
நன்மைகள்
கழிவு நீரிலிருந்து 90-100% கன உலோகங்களை நீக்குகிறது.
வேதியியல் மற்றும் உயிரியல் ஆக்ஸிஜன் தேவையை குறைக்கிறது.(70-90%).
கரைந்திருக்கும் திடப் பொருட்களை குறைக்கிறது (>90%)
கழிவு நீரிலிருந்து நைட்ரேட் மற்றும் பாஸ்பேட்டை நீக்குகிறது (80 - 98%).
தாவர படுக்கை முறை
இம்முறையில் தாவரங்கள் மற்றும் புவியியல் பொருட்களை ஒருங்கிணைத்து கழிவு நீரிலிருந்து நச்சு பொருட்கள் நீக்கப்படுகின்றன.
கோரை புற்கள்
கன உலோகங்கள் மற்றும் உப்புக்களை உறிஞ்சுதல் மூலம் கழிவுநீரிலிருந்து இவற்றை நீக்குகின்றன.
வேர் கசிவு வேதிப் பொருட்கள் மூலம் வேர் பகுதியில் உள்ள கன உலோகங்களை மண்ணில் முடக்கி விடுகின்றன.
ஆகாய தாமரை
நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் உப்புக்களை உறிஞ்சுதல் மூலம் கழிவு நீரிலிருந்து இவற்றை நீக்குகின்றன.
வெர்மிகுலைட்
இது அதிக அளவு நேர்மின் அயனி பரிமாற்று திறனை உடைய சிலிகேட் தாதுப் பொருளாகும்.
இதன் மூலம் அதிக அளவிலான உலோகங்களை ஒட்டுதல் மூலம் நீக்குகிறது.
மறுசுழற்சி
முதலில் கீழடுக்கில் வரிசையாக கூழாங்கற்கள், மணல்,வெர்மிகுலேட், மண் ஆகியவை மற்றும் மேலடுக்கில் கோரை, பூனைவால் நட்டு மேலிருந்து கீழடுக்கில் இணையும்படி கழிவுகள் வெளியேறும் குழாயை இணைக்க வேண்டும். இதன் மூலம் கழிவுகள் படிப்படியாக சுத்தீகரிக்கப்பட்டு மேலுள்ள கோரை, பூனைவால் புற்களால் நச்சுப்பொருட்கள் உள் இழுக்கப்படுகிறது. இவை அனைத்தும் முதல் கட்ட சுத்தீகரிப்பாகும்.
இந்த நீரை மேலும் சுத்தீகரிக்க நீள் சதுர வடிவில் கண்ணாடி அல்லது தடிமன் குறைந்த இரும்பு தகட்டாலான பெட்டகத்தினுள், குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த கழிவிலுள்ள நைட்ரஜென், பாஸ்பேட் உப்புகள் ஆகாய தாமரையால் உள் இழுக்கப்பட்டு மற்றொரு குழாயின் மூலம் சுத்தமான நீராக சேகரிக்கப்படுகிறது.
இவ்வாறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கழிவு நீரை சுத்திகரிக்க இந்த எளிய முறையை பயன்படுத்தி நீரை பாசனத்திற்கு மற்றும் இதர விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments