விவசாயம் செய்வதோடு மட்டுமல்லாமல், விதைப்பண்ணையும் அமைத்து, விதைகளை விற்பனை செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும். நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்வது தான் விதைப்பண்ணையின் முக்கிய குறிக்கோள். விதைச்சட்டம் 1966 பிரிவு 8 இன் படி, கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் நோக்கத்துடன், 1979 ஆம் ஆண்டு முதல் விதைப்பண்ணை முறையை, விதைசான்றுத் துறை செயல்படுத்தி வருகிறது.
விதைப்பண்ணை (Seed Farming)
விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகளுக்கு இங்கு சான்று அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விதைப்பண்ணைத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த விதைப்பண்ணைகளில், மத்திய அரசு அனுமதி பெற்ற விதைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
அரசு, அரசு சார்பு, தனியார் மற்றும் விவசாய குழுக்கள் என யார் வேண்டுமானாலும் விதைச்சான்று அலுவலகத்தில் விதை உற்பத்தியாளராக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். விதை உற்பத்தியாளராக பதிவு செய்ய எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் உதவி விதை அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொண்டு, விதைப்பண்ணை உற்பத்தியாளராக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பிறகு, விதை உற்பத்தியை தொடங்கலாம்.
விதைச் சான்று (Seed Certificate)
விதைச் சான்று அலுவலர்களின் மேலான வழிக்காட்டுதலின் படி, நல்ல தரத்தில் விதைகளை உற்பத்தி செய்து, வேளாண் துறைக்கே நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பும் உள்ளது. விதை உற்பத்தியாளராக பதிவு செய்தவுடன் பூக்கும் பருவம் மற்றும் அறுவடை நேரங்களில், வேளாண் விதை சான்று அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த கள ஆய்வில் பயிர் விலகு தூரம் மற்றும் கலப்பு, விதை மூலம் பரவும் நோய் இருக்கிறதா? போன்றவை குறித்து ஆய்வு செய்யப்படும். உற்பத்தி செய்யப்படும் விதைகளை சுத்திகரித்து, தரமான விதைகளுக்கு மட்டுமே வேளாண் துறையின் சான்று அளிக்கப்படும்.
மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட விதைகளை உற்பத்தி செய்ய வல்லுநர் விதை, சான்று விதை மற்றும் ஆதார விதை என மூன்று விதமான வகைகளில் விதைகளை உற்பத்தி செய்யலாம். வல்லுநர் விதை என்பது ஆராய்ச்சி நிலையங்கள், அறிவியல் நிலையங்கள் மற்றும் அரசு விதைப்பண்ணைகளில் விதைச் சான்று அலுவலர்களின் நேரடி மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகளாகும்.
வல்லுநர் விதைகளை விவசாயிகளின் தோட்டம் அல்லது அரசு பண்ணைகளில் நட்டு, விதையாக உற்பத்தி செய்த பிறகு, மறுபடியும் வேளாண் விரிவாக்க அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் போது, அந்த விதைகளை சான்றிதழ் விதை மற்றும் ஆதார விதை என்று அழைக்கிறார்கள்.
இவ்வாறு பெறப்படும் விதைகளை, யாரிடம் இருந்து வாங்குகிறோமோ, அவர்களின் ரசீது, விதைச்சான்று பதிவு மற்றும் வயலின் வரைபடம் ஆகியவற்றை இணைத்து படிவம் 1 இல் பதிவு செய்யப்படும். இப்படி செய்யப்படும் பதிவுகளுக்கு, பயிர் ஒன்றுக்கு 25 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் 25 ஏக்கர் வரை, ஒரே விதைப் பண்ணையாக பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல, வயல் ஆய்வு கட்டணம் 50 அல்லது 60 ரூபாய் தான் வரும்.
இப்படித் தான் விவசாயிகள் விதைப்பண்ணையை அமைக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், வேளாண் துறையை அணுகலாம்.
மேலும் படிக்க
தேங்காய் விற்பனையில் குவியும் வருமானம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
ஒரு மாவட்டம் ஒரு பொருள்: புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் அம்சங்கள்!
Share your comments