நல்ல மகசூல் பெற ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி மிகவும் அவசியம். இதற்காகவே இயற்கை முறையில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற இயற்கை விவசாயிகள் பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர், அந்த வகையில் பயிர்களுக்கு ஊட்டம் அளிக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் குறித்து செய்முறை விளக்கத்தைத் தருகிறார் இயற்கை விவசாயி ஸ்ரீதர் அவர்கள்.
தேவைப்படும் பொருட்கள்
-
30 கிலோ பச்சை சாணம். (எருமை சாணம் சிறந்தது)
-
10 முதல் 15 லிட்டர் மாட்டுக் கோமியம்.
-
2 முதல் 4 கிலோ கடலை புண்ணாக்கு. நன்கு தூளாக்கப்பட்டது.
-
2 கிலோ வெல்லம்.
-
புளித்த தயிர் சுமார் அரை லிட்டர்.
-
பரங்கி பழம் (ஒன்று), பப்பாளிப் பழம்(இரண்டு, வாழைப்பழம் (சுமார் இருபது)
-
போன்ற பழங்கள் நன்கு பழுத்து இருக்க வேண்டும் (இவற்றில் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் கிடைத்தால் மூன்றையும் பயன்படுத்தலாம்)
-
ஒரு லிட்டர் மீன் அமிலம்
-
தேவைப்பட்டால் திரவ உயிர் உரங்கள்
-
முற்றிய தேங்காய் ஒன்று
-
பிளாஸ்டிக் பேரல் (200 லிட்டர் கொள்ளளவு)
செய்முறை
-
முதலில் சாணம் மற்றும் கோமியம் இரண்டையும் கெட்டியாகக் கரைத்து பிளாஸ்டிக் கலனில் ஊற்ற வேண்டும்.
-
கடலைப் புண்ணாக்கு மற்றும் உருண்டை வெல்லம் இரண்டையும் சற்று தூளாக்கி அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்
-
பழங்களைத் தோலுடன் கூழாக்கி கரைசலில் சேர்க்க வேண்டும்
-
பின்னர் தயிர் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றைக் கரைசலில் சேர்க்க வேண்டும்
-
பின் தேங்காயைக் கூழாக்கி கரைசலில் கலக்க வேண்டும்
-
தேவைக்கு ஏற்ப அனைத்து நுண்ணுயிர்களை 100 மிலி கரைசலில் கலக்க வேண்டும்
-
அதன் பிறகு சேர்த்துள்ள இடு பொருட்கள் மற்றும் நாம் ஊற்றும் தண்ணீர் ஆகிய இரண்டையும் சேர்த்து பிளாஸ்டிக் பேரலில் பாதி அளவுக்கு வருமாறு இருக்க வேண்டும். சுமார் 100 லிட்டர் இருக்க வேண்டும்
-
இந்த பேரலை நிழலில் இருக்குமாறு வைத்து வாய் பகுதியை நல்ல சணல் சாக்கு வைத்து மூடி விட வேண்டும்
-
இந்த கரைசலைத் தொடர்ந்து ஆறு நாட்களுக்குத் தினமும் ஒரு தடவை குச்சி கொண்டு கலக்க வேண்டும்
-
ஏழாம் நாள் இதைப் பாசன தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு பாய்ச்சலாம் , பாசனத்திற்கு ஒரு ஏக்கருக்கு இந்த அடர் கரைசல் சுமார் 20 லிட்டர் போதுமானது.
-
பயிர்கள் மீது தெளிக்க சுமார் 20 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் இந்த அடர் கரைசலை வடிகட்டி தெளிக்கலாம்.
-
அவ்வப்போது சிறிது சாணம் மற்றும் வெல்லம் சேர்க்கும் போது சில மாதங்கள் வரை பயன்படுத்தலாம். தொடர்ந்து தினமும் கலக்கி விடுவது நல்லது.
பயன்கள்
-
பயிர்கள் மீது தெளிக்கும் போது அவை நன்கு வறட்சி தாங்கும் தன்மை பெறுகின்றது.
-
இதனால் மானாவாரி பயிர்களில் மகசூல் அதிகரிக்கும்.
-
மிக அதிக அளவில் நுண்ணுயிர்கள் உடையைக் கரைசல் என்பதால் இதனைப் பாசன நீரில் கலந்து தெளிக்கும் போது வயலில் நுண்ணுயிர்கள் எண்ணிக்கை உடனே அதிகரிக்கும்.
-
மிக அதிக அளவில் மண் புழுக்கள் மண்ணில் மேற்பகுதியை நோக்கி வேகமாக வரும் . இதனால் மண் பொல பொலப்பாகி காற்றோட்டம் அதிகரிக்கும்.
-
உடனே தாவரங்களின் வேர் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு மண்ணில் கரையா நிலையில் உள்ள சத்துக்களும் வேர்கள் எளிதாக உறிஞ்சும் அளவிற்கு நுண்ணுயிர்களால் கரைத்துக் கொடுக்கப்படும்
-
பயிர்கள் இந்த கரைசலைத் தெளிக்கும் போது ஒளிச்சேர்க்கை நன்கு நடைபெறும். பயிர் விரைவில் கரும் பச்சை நிறத்தில் மாறிவிடும்.
-
பூ உதிர்தல் முற்றிலும் தடுக்கப்படும்
-
கொடிவகை காய்கறிகளில் தெளிக்கப்படும் போது பெண் பூக்கள் எண்ணிக்கை பெருகி மகசூல் அதிகரிக்கும்.
-
நெல் பயிர்களில் பயன்படுத்தும் போது அதிகப்படியான தூர்கள், நீளமான கதிர்கள் அதிக எடையுடன் கூடிய மணிகள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் மகசூல் அதிகரிக்கும்.
-
கரும்பு பயிரில் இந்த கரைசலைப் பயன்படுத்தும் போது மிக உயரமான வளர்ச்சி மற்றும் அதிக சர்க்கரை சக்தி கிடைக்கும்
-
உளுந்து, பச்சைப் பயறு, துவரை, வேர்க்கடலை போன்ற பயிர்கள் மீது சீரான வளர்ச்சி மற்றும் அதிக அளவில் பூக்கள் மற்றும் திரட்சியான காய்கள் கிடைக்கும்
-
கிழங்கு பயிர்களில் பயன் படுத்தும் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கக்கூடும்
-
வாழை சாகுபடியில் இதன் பயன்பாடு என்பது திடமான மரங்கள் மற்றும் அதிக சீப்புடைய திரட்சியான காய்கள் கிடைக்கும், மரங்களில் சாயும் தன்மை குறையும்
-
இதனை அனைத்து வகையான தோட்டக்கலை பயிர்களில் பயன்படுத்தலாம்.
இந்த மேம்படுத்தப்பட்ட அமிர்த்த கரைசலை தனது பயிர் சாகுபடியில் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் அதிக மகசூழ் கிடைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீதர், இதனை விவசாயிகள் வேண்டும் என்றால் மேல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி செய்யலாம் என்றார்.
தகவல்
ஸ்ரீதர், இயற்கை விவசாயி
தொடர்புக்கு: 9092779779
மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!!
Share your comments