சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசம்பட்டு, செல்லம்பட்டு, கொசப்பாடி, புதுப்பாலப்பட்டு, பாச்சேரி, மூலக்காடு, இன்னாடு, வெள்ளிமலை உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நிலவும் அதிகப்படியான வறண்ட வெப்ப நிலை மற்றும் அனல் காற்று காரணமாக மாவுப்பூச்சி மற்றும் செம்பேன் தாக்குதலால் மரவள்ளிகிழங்கு பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆய்வு
இந்த நிலையில் பூச்சி தாக்குதலால் (Pest Attack) பாதிக்கப்பட்ட மரவள்ளி கிழங்கு பயிர்களை சங்கராபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிரின் நுனி குருத்துக்களை அகற்ற வேண்டும். நடவின் போது விதை கரணை குளோரோபைரிபாஸ் (Chlorpyrifos) என்ற மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து 15 நிமிடம் கழித்து விதை நேர்த்தி செய்து நடவு செய்திட வேண்டும்.
கட்டுப்படுத்தும் முறை:
மாவுப்பூச்சி தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது அசாடிராக்டின் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருந்தால், தையோமித்தாக்சைம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி (அல்லது) அபாமெக்டின் என்கின்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். குறிப்பாக, பூச்சிமருந்து தெளிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லிகளை கலந்து தெளிக்க கூடாது. கைத்தெளிப்பானை பயன்படுத்தி காலை அல்லது மாலை வேளையில் மருந்து தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்தன் மூலம் பூச்சி தாக்குதலில் இருந்து மரவள்ளி கிழங்கு பயிரை பாதுகாக்க முடியும். அப்போது உதவி தோட்டக்கலை அலுவலர் வேலன், ராஜேஷ், பாக்யராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க
கால்நடைகளில் கோமாரி நோய் வராமல் தடுப்பது எப்படி?
விளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்! இழப்பீடு வழங்க கோரிக்கை!
Share your comments