நெற்பயிரானது வயல்வெளியில் விதைப்பு முதல் அறுவடை வரையிலும் மற்றும் சேமிப்புக் கிடங்குகளிலும் பல்வேறு வகையான பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்கள் மற்றும் எலிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்திற்கு உள்ளாகிறது.
இந்நிலையில் நெற்பயிரில் தண்டு பகுதி மற்றும் இலைகளை தாக்கும் பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சிகள் போன்றவற்றிலிருந்து பயிரினை காக்க ”உழவியல் முறையில்” ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்வது குறித்த தகவல்களை முனைவர்களாகிய ரமேஷ், ராம் ஜெகதீஷ், யுவராஜா, (தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம்) மற்றும் சண்முகம் (பயறுவகைத்துறை- TNAU) ஆகியோர் கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளனர். அவற்றின் விவரம் பின்வருமாறு-
உழவியல் முறை- ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை:
- கோடையில் ஆழமாக உழவு செய்வதால் மண்னிற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள். கூட்டுப்புழுக்கள் மற்றும் நூற்புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு அவை சூரிய வெப்பத்தினாலும், பறவைகளால் கொத்தித் தின்றும் அழிக்கப்படுன்றன.
- களைகளானது பெரும்பாலான தீமை செய்யும் பூச்சிகளான கூண்டுப்புழு, பச்சைத் தத்துப்பூச்சி, ககிர்நாவாய்பூச்சி, சிறுகொம்பு வெட்டுக்கிளி, ஆனைக்கொம்பன் ஈ, மாவுப்பூச்சி ஆகியவற்றிற்கு மாற்று உறைவிடமாய் இருந்து அவைகளின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்திற்கு பெரிதும் உதவி புரிகின்றன. எனவே வயல்களிலும் வரப்புகளிலும் காணப்படும் களைகளை நீக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- மின் கம்பங்களுக்கு அருகில் நாற்றங்கால் தேர்ந்தெடுக்கக்கூடாது. இல்லையெனில் இலைப்பேன் தாக்குதல் மிகுதியாகக் காணப்படும்.
- 8 அடிக்கு 1 அடி இடைவெளி இட்டு பத்தி நடவு செய்து பயிர்களை பிரித்து நட்டும், தண்ணீர் தேங்கி நிற்காமல் வயலை சீராக சமப்படுத்தியும் புகையானை கட்டுப்படுத்தலாம்.
- குறைந்த இடைவெளியில் நடப்படும் வயல்களில் புகையான், ஆனைக்கொம்பன் ஈ, இலைமடக்குப்புழு மற்றும் வெண்முதுகு தத்துப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். எனவே அதிக இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும்.
- வரப்புகளில் பயறுவகை பயிர்களை வளர்த்து நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தீமை செய்யும் பூச்சிகளின் சேதத்தைக் குறைக்க வேண்டும்.
கைக்கொடுக்கும் பயிர் சுழற்சி முறை:
- பயிர் சுழற்சி முறையைக் கடைபிடிப்பதால் பூச்சிகளின் தாக்குதல் குறைவாக இருக்கும்.
- நாற்றுகள் முழுவதையும் ஒரு நாள் நீரில் மூழ்கச் செய்து, பின்பு நீரை வடிகட்டி இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.
- வயல்களில் நிழல் இல்லாத வண்ணம் பார்த்துக் கொண்டால் இலை மடக்குப்புழுவின் தாக்குதல் குறைவாக இருக்கும்.
- மண் பரிசோதனை செய்யாத வயல்களில் இலை வண்ண அட்டையை (Leaf colour chart- LCC) பயன்படுத்தி தழைச்சத்து உரங்களை பிரித்தும் யூரியாவுடன் வேப்பம் புண்ணாக்கினை 5:1 என்ற அளவில் கலந்தும் இட வேண்டும்.
- நீர்பாய்ச்சுதலில் காய்ச்சலும் பாய்ச்சலுமாக மேற்கொள்வதால் புகையான, வெண்முதுகு தத்துப்பூச்சி மற்றும் நாவாய்ப்பூச்சிகளின் தாக்குதலை குறைக்க முடியும். வெள்ள நீர்ப் பாய்ச்சுவதால் ஆனைக்கொம்பன் ஈ மற்றும் படைப்புழுவின் தாக்குதல் குறைவாக இருக்கும்.
Read also: ஒரே கிணறு- 50 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம்: அசத்தும் சிவகங்கை இளைஞர்!
- நெல் பயிரை அறுவடை செய்யும் போது தரை பரப்பினை ஒட்டி அறுத்து பின்பு அடித்தாள்களை நீக்கிவிட வேண்டும்.
பூச்சித்தாக்குதலால் ஏற்படும் சேதத்தின் மூலம் 25 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், நெற்பயிரினை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைபிடியுங்கள். அதுத்தொடர்பான சந்தேகம் ஏதேனும் இருப்பின், அருகிலுள்ள வேளாண் அலுவலர்களை தொடர்புக் கொள்ளவும்.
Read more:
Onion export ban: மறுதேதி குறிப்பிடாமல் வெங்காய ஏற்றுமதிக்கு தடை- காரணம் என்ன?
நெல் மற்றும் சோள பயிரில் TNAU வெளியிட்ட புதிய இரகங்களின் சிறப்பம்சம் என்ன?
Share your comments