1. விவசாய தகவல்கள்

உளுந்து மற்றும் பாசிப் பயறு பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்

Sarita Shekar
Sarita Shekar
black gram

பயறு வகைப் பயிர்களில் உளுந்து மற்றும் பாசிப்பயறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். புரதச்சத்து மிகுந்த இப்பயிர்களில் கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இப்பயிர்களை பல்வேறு பூச்சிகள்தாக்கி, மகசூல் இழப்பிற்கு வித்திடுகின்றன. அவற்றை பற்றியும் மேலாண்மை முறைகள் குறித்தும் இங்கு காண்போம்.

 

1) காய்மலர்துளைப்பான்கள்

அ) பச்சைகாய்த்துளைப்பான்கள்

இப்பூச்சியின் இளம்புழுக்கள் இளங்கொழுந்துப் பகுதியினை உண்டு சேதப்படுத்துகின்றன. முதிர்ச்சி அடைந்த புழுக்கள் இலைகள் மற்றும் காய்களை உண்ணுகின்றன. தனது தலைப்பகுதியினை உட்செலுத்தி, காய்களுக்குள் தென்படும் உட்பொருட்களை உண்ணுகின்றன. மேலும், தலையைத் தவிரமற்ற உடல்பாகங்களை வெளியே வைத்துக் கொண்டு வட்ட வடிவ துளைகளை ஏற்படுத்துகின்றன. இதனால் மகசூல் இழப்பு அதிகளவு தென்படும்.

ஆ) புள்ளிக் காய்ப்புழுக்கள்

உடல் முழுதும் கருப்பு நிறப்புள்ளிகளைக் கொண்டுள்ள இப்புழுக்கள், பூக்கள் மற்றும் காய்களைத் துளைத்து சேதப்படுத்துகின்றன. தாக்கப்பட்ட காய்களில் விதைகள் இல்லாமல் போகும், துளையிட்ட பகுதியில் புழுக்களின் எச்சங்களும், மொட்டுக்கள், பூக்கள் மற்றும் காய்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பின்னியிருக்கும்.

இ) முள்காய்த்துளைப்பான்

இவ்வகை காய்த்துளைப்பான்கள், புதிதாக வளரக்கூடிய காய்களை ஒன்றுடன் ஒன்றாய் பின்னச் செய்து, உள்ளேயுள்ள விதைகளை உண்ணும். முதிர்ந்த காய்லாளில் புழு நுழைந்த இடத்தில், பழுப்புநிற புள்ளிகளுடன் தென்படும். தாக்கப்பட்ட பூக்கள் மற்றும் பிஞ்சுகள் தொங்கிக் கொண்டு இருக்கும்.

ஈ) நீல வண்ணத்துப்பூச்சி

மங்கிய பச்சை நிறவிடலுடன் சொரசொரப்பான தோலுடன் கூடிய இப்புழுக்கள் மொட்டுகள், பூக்கள், மற்றும் காய்களைத் துளைத்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. தாக்கப்பட்ட இடங்களில் தேன்சுரப்புகளுடன் எறும்பு நடமாட்டத்துடன் காணப்படும்.

 

2) சாறுஉறிஞ்சும்பூச்சிகள்

சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளைஈ, போன்றவைகள் இப்பயிர்களில் அதிகளவுமகசூல் இழப்பினை உண்டாக்கி பல்வேறு வைரஸ் நோய்களை கடத்துகின்றன.

அ) அசுவினி

கருமை நிறபூச்சிகள் இறக்கையுடனும் இறக்கையற்றும் காணப்படுகின்றன. இவை கொழுந்துப்பகுதிகள் பூக்கள் மற்றும் காய்களில் கொத்துப் கொத்தாய்த் தோன்றி அவற்றின்சாற்றை உறின்சுகின்றன. இதனால் பயிரின் வீரியம் இழப்பதுடன் வளர்ச்சிகுன்றி, பெருமளவில் மகசூல் இழப்பினை ஏற்படுத்தும். இப்பூச்சியானது இளைச்சுருள் நச்சுயிர் வைரஸ் நோயினைக் கடத்துகின்றன. மேலும், இப்பூச்சிகளில் இருந்து வெளியாகும் தேன் போன்ற திரவத்தால், எறும்புகள் ஈர்க்கப்படுகின்றன.

ஆ) வெள்ளைஈ

வெள்ளை ஈக்களின் குஞ்சுகளும் முதிர் பூச்சிகளும் இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சி, உருக்குலையச் செய்கின்றன. குஞ்சுகள் இலைகளின் பின்புறத்தில் பற்றிப் பிடித்து சாற்றை உறிஞ்சுவதால் வளைச்சி குன்றி காணப்படும். மேலும், இவை மஞ்சள் தேமல் நோயினை ஏற்படுத்தும் வைரஸ் நச்சுயிரினைக் கடத்துகின்றன.

 

3) மலர்வண்டுகள்

தாய்வண்டுகள் பூப்பிடுக்கும் தருணத்தில் அதிகளவு தோன்றி, மொட்டுகள் மற்றும் பூக்களைக் கடித்துஉண்டு சேதப்படுத்துகின்றன. இதனால் காய்பிடிப்பு குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும்.

ஒருங்கிணைந்தபூச்சிமேலாண்மைஉத்திகள்

*ஆழமான கோடை உளவு மேற்கொள்ள வேண்டும் இதனால் மண்ணில் காணப்படும் கூட்டுப் புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு அழிக்க முடியும்.

* மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புடைய இரகமான வம்பன்-8  உளுந்துப் பயிரை பயிரிடலாம்.

* குறுகிய கால இரகங்களான ஏ.டி.டி 4, டி.எம்.வி 1 போன்ற உளுந்து பயிர்களைப் பயிரிடலாம்.

* நெருக்கமான பயிர் இடை வெளியைத் தவிர்க்க வேண்டும்.

* மஞ்சள்நிற ஒட்டுப்பொறி ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து வெள்ளை ஈக்களைக் கண்காணிக்கலாம்.

* எக்டருக்கு 50 என்ற எண்ணத்தில் பறவை இருக்கைகளை ஏற்படுத்தி பறவைகளை அமரச் செய்து புழுக்களை உண்ணச் செய்யலாம்.

* ஹெலிலியூர் 12 / எக்டர் என்ற அளவில் வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

* விளக்குப்பொறி ஒன்று/ எக்டர் என்ற அளவில் வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

* ஊடு பயிராக நிலக்கடலை, சோயாபீன்ஸ் போன்றவைகளைப் பயிரிடலாம்.

* டிரைக் கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை 1 சி.சி (20000 முட்டைகள்) ஏக்கர் என்ற அளவில் வாரத்திற்கு நான்கு முறை வெளியிட்டு காய்புழுக்களை அளிக்கலாம்.

* காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளில், பிவேரியா பெசியானா, மெட்டாரைசியம் அனிசோபிளியே மற்றும் லக்கானிசிலியம் லக்கானி போன்ற பூஞ்சாண பூச்சிக் கொல்லிகளை 10 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளித்து காய்துளைப்பான்கள்,வெள்ளை ஈக்கள், மலர்வண்டுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

* பி.டி நனையும் தூளினை லிட்டருக்கு 2 கிராம் தெளித்து காய் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

* வேம்பு சார்ந்த தாவர பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

 

5 % வேப்பங்கொட்டைச்சாறு

(அ)

10 மில்லிவேப்பெண்ணெய் / லிட்டருக்கு

(அ)

10        மில்லிபுங்கஎண்ணெய்/ லிட்டருக்கு

(அ)

அசாடிராக்டின் 10 EC @ 2 மிலி / லிட்டருக்கு

என இதில் ஏதேனும் ஒன்றினைப் பரவும் திரவம் கலந்து தெளிக்கலாம்.

* கீழ்க்காணும் பூச்சிக் கொல்லிகள் ஏதேனும் ஒன்றினைப் பரவும் திரவம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

அ) காய்த்துளைப்பான்கள் / காய்ப்புழுக்கள்

குளோரான்ட்ரனிலிப்ரோல்18.5 SC @ 0.3 மி.லி / லிட்டர் (அ) இன்டாக்ஸாகார்ப்    14.5 SC @ 1 மி.லி / லிட்டர் (அ) லூஃபனூரான் 5.4 EC @ 1.2 மி.லி /லிட்டர்  (அ)   தயோடிகார்ப்  75 WP @ 2 கிராம் / லிட்டர்.

ஆ)அசுவினி, வெள்ளைஈக்கள்மற்றும்காய்நாவாய்ப்பூச்சிகள்

டைமீத்தோயேட் 30 EC @ 1.5 மி.லி / லிட்டர்(அ) இமிடாகுளோபிரிட் 17.8  SL @  0.2மி.லி / லிட்டர்(அ) அசிபேட்75 SP @ 1.5 கிராம் / லிட்டர்(அ) ஃபுளோனிக்காமைடு 50  WG @ 0.2 1.5 கிராம் / லிட்டர் .

இ) பூவண்டுகள்

மோனோகு ரோட்டோபாஸ் 36 SL @ 2மி.லி / லிட்டர்(அ) குயினல்பாஸ் 1.5 DP @ 10  கிலோ / ஏக்கர்(துணியில்கட்டிதூவவேண்டும்).

குறிப்பு

* மேலே குறிப்பிட்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்று மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

* பரவும் திரவம், பூச்சி மருந்து கரைசலில் (தெளிப்புதிரவத்துடன்) 0.5 முதல் 1 மி.லி / லிட்டர் என்ற அளவில் சேர்த்து நன்கு கலக்கிய பின் தெளிக்க வேண்டும்.

* முடிந்த வரை செயற்கைப் பைரித்ராய்டு மருந்துகளைத் தெளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவை சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பெருக்கத்திற்கு வித்திடுபவையாகும்.

* தேவைப்படின் காய்பிடிக்கும் பருவத்தில் சைப்பர்மெத்ரின், லேம்டாசைஹேலோத்ரின் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

 

English Summary: Integrated pest management in black gram and mustard crops Published on: 20 July 2021, 11:14 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.