மல்லிகைப் பூக்கள் அதிகம் உற்பத்தியாகாத நவம்பர், டிசம்பர் குளிர் மாதங்களிலும் மல்லிகை உற்பத்தி சாத்தியமே என்பதை மதுரை வேளாண் அறிவியல் மையம் நிரூபித்துள்ளது.
மல்லிகை சாகுபடி
மதுரை, ராமநாதபுரம் உட்பட சில மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக சாகுபடி மூலம் 2500 எக்டேர் பரப்பளவில் மல்லிகைப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மதுரையில் குறிப்பாக திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி வட்டாரங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. பிப்ரவரியில் பூக்கத் தொடங்கி செப்டம்பரில் உற்பத்தி முடிவடையும். இந்த காலங்களில் பூவரத்து அதிகமாக இருப்பதால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. சில நேரங்களில் விலையே கிடைக்காமல் வீதியில் கொட்டும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
கவாத்து
செப்டம்பரில் மல்லிகை செடிகளை கவாத்து செய்து ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தால் உற்பத்தியாகாத நவம்பர், டிசம்பரிலும் பூக்கள் பூத்து குலுங்கும். விற்பனை விலையும் அதிகமாக கிடைக்கும். செப்டம்பர் முதல் வாரத்தில் தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் செடிகளை கவாத்து செய்ய வேண்டும்.
வெட்டுப்பட்ட பகுதிகளில் 'பைட்டலான்' பூஞ்சாண கொல்லியை தடவி பூஞ்சாண தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். கவாத்தின் போது குறுக்கு கிளைகள், நோய், பூச்சி தாக்கிய கிளைகள், மெலிந்த சிறிய கிளைகளை வெட்டி சூரியஒளி படுமாறு செய்ய வேண்டும். கவாத்து செய்தபின் 10 கிலோ தொழு உரத்துடன் 65 கிராம் யூரியா, 375 கிராம் சூப்பர், 100 கிராம் பொட்டாஷ் என்ற அளவில் செடியின் நடுவிலிருந்து அரையடி தள்ளி சிறு குழி தோண்டி உரமிட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
Also Read | தமிழக பட்டு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!
ஒவ்வொரு செடிக்கும் 500 கிராம் வேப்பம் புண்ணாக்கு இட்டால் நுாற்புழுக்கள் தாக்காமல் செய்யலாம். கவாத்து செய்த ஒரு மாதத்திற்கு பின் 10 லிட்டர் தண்ணீரில் 10 மில்லி சைகோ செல், 4 மில்லி ஹியூமிக் அமிலம் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு முறை தெளிக்க வேண்டும். இந்த முறைகளை கடைப்பிடித்தால் நவம்பர், டிசம்பரில் பூக்களின் மகசூல் அதிகரித்து இருமடங்கு லாபம் பார்க்கலாம்.
பழனிகுமார், கிருஷ்ணகுமார்
தொழில்நுட்ப வல்லுனர்கள்
வேளாண் அறிவியல் நிலையம்
மதுரை
79043 10808
மேலும் படிக்க
Share your comments